சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘கருடன்’ .இப்படத்தில் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில்,”இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”இயக்குநர் துரை செந்தில்குமார் – நடிகர் சூரி இணைந்து பணியாற்றும்போது ‘கருடன்’ படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருந்தது. ‘விடுதலை’ படத்திற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை தான் சூரியை சந்தித்து பேசி இருக்கிறேன். விடுதலை படத்தின் பணிகள் தொடங்கும் போது தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்னிடம் தயாரிப்பாளர் குமாரை அறிமுகப்படுத்தி ‘கருடன்’ என்று ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். செந்தில் தான் இயக்கவிருக்கிறார் என என்னிடம் சொன்ன போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.இப்படத்தில் இடம்பெறும்
ஆதி கதாபாத்திரத்திற்கு சசிகுமாரை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சொன்னபோது, முதலில் வியந்தேன். அவர் ஒப்புக் கொள்வாரா..! என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அப்போதும் அவர் சூரிக்காகத்தான் இந்த கதையை நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். படம் பார்த்துவிட்டேன். படத்தில் சசிகுமாருக்கு அழுத்தமான வேடம். அது அவருக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. ” என்றார்.,
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,
” தம்பி சூரி நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தலைமை கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களுக்கு அப்படத்தின் வெளியீடு என்பது பூக்குழிக்குள் இறங்குவது போன்றது. வெளியிலிருந்து பார்க்கும் போது பூக்குழி என்பது பூவின் புதையல் போன்று தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் தான் அது தீமிதி என தெரியவரும். அவருடைய முதல் படத்தில், அவரை அருமையான பூசாரி ஒருவர் அவருக்கு கை பிடித்து அழைத்து வந்தார். இந்த திரைப்படத்தில் அவருடன் பலமுறை தீமிதித்தவர்கள் உடன் இருந்தனர். தீ மிதிக்கும் போது அவருக்கு அருகில் இரண்டு பக்கங்களிலும் வேட்டியை மடித்துக் கொண்டு நின்றனர். தீ மிதிக்கும் போது ஏதேனும் தடுமாற்றம் ஏற்பட்டால் காப்பாற்றுவதற்காக தான் இந்த ஏற்பாடு. ஆனால் சூரி எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் நிதானமாக தீ மிதியில் இறங்கி நடந்து வந்தார்.
இந்தப் படத்தில் அவருடைய உழைப்பு அசாதாரணமானது. ஒவ்வொரு நொடியும் படத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். இதனாலேயே அவர் திரைத்துறையில் மிக உயரத்திற்கு செல்வார். அதற்காக மனமார வாழ்த்துகிறேன்.நீண்ட நாள் கழித்து தம்பி சசியுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன்.
இந்த படத்திற்கு பின்னணி பேசும்போது, இயக்குநர் வெற்றிமாறன் என்னை சந்தித்து, ‘இந்தப் படத்திற்கு அனைத்தும் நல்லபடியாக அமைந்து விட்டது.’ என்றார். அவரிடமிருந்து இதுபோன்ற வாழ்த்து கிடைத்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் துரை செந்தில்குமார்- கலைஞர்களை தோழமையுடனும், புன்னகையுடனும் அணுகி பணியாற்ற வைத்த அனுபவம் மறக்க இயலாது. இந்த திரைப்படத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. ” என்றார்.