ரிஷிகேஷ் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில், லதா முருகன் தயாரித்துள்ள படம், பகலறியான். இதில், வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினுப் பிரியா நடித்துள்ளனர். எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார், முருகன்.
ஒரு இரவு நேரத்தில் சட்டவிரோத செயல்களை செய்யும் ஒருவனின் காதலையும் அதன் ஆழத்தையும் சொல்லும் படமே ‘பகலறியான்’.
நாயகன் வெற்றி, தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்தவர். ஜெயிலில் இருந்து திரும்பிய பிறகும், கொலை, கொள்ளை, பெண் கடத்தல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட, சட்டவிரோத செயல்களை செய்பவர்களுடன் இருந்து வருகிறார். இவரை, நாயகி அக்ஷயா கந்தமுதன் காதலிக்கிறார். வெற்றி, இது குறித்து அக்ஷயா கந்தமுதனின் அப்பாவிடம், திருமணம் குறித்து பேசுகிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.
வெற்றி, நாயகி அக்ஷயா கந்தமுதன் இருவரும் வீட்டை விட்டு ஓடுகின்றனர். இந்நிலையில், மகளைத்தேடி, அப்பா ஒரு பக்கமும், அண்ணன் ஒரு பக்கமும் தேடுகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சஸ்பென்ஸூடன் சொல்லும் படமே, பகலறியான்.
நாயகன் வெற்றி, படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, இறுக்கமான முகத்துடன் கதாபாத்திரதிற்கேற்றபடி நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு வசனங்கள் பேசுவதோடு சரி. அவர் நல்லவரா, கெட்டவரா? என்பது படத்தின் இறுதியிலேயே தெரிகிறது. காதலியின் நிலைமை தெரிந்து, அவர் எடுக்கும் முடிவும் நெகிழச்செய்கிறது. அடிதடியிலும் பளிச்சிடுகிறார்.
மற்றொரு நாயகனாக முருகன், ‘சைலண்ட்’ என்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பேசமலேயே நடித்திருக்கிறார். எதிரிகளிடம் சண்டையிடும் காட்சிகளிலும், தங்கையிடம் உருகும் காட்சிகளிலும், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அக்ஷயா கந்தமுதன், வெற்றியின் காதலுக்காக உருகுவதிலும், வெற்றியை கண்டிப்பதிலும் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். அதேபோல் இன்னொரு நாயகி வினு பிரியா,சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார்.
இதுவரை காமெடி வேடங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு, இந்தப்படத்தில் தாதாவாக நடித்து, ஆக்ஷன் காட்சிகளில் அட்டகாசப்படுத்துகிறார்.
போலீஸாக நடித்திருக்கும் தீனாவின் கதாபாத்திரத்திம் திரைக்கதைக்கு தேவையிலாதது.
ஒளிப்பதிவாளர் அபிலாஷின் ஒளிப்பதிவில் இரவுநேரக்காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. மர்மமாக செல்லும் திரைக்கதைக்கு, விவேக் சரோவின் இசை பலம் சேர்த்துள்ளது.
சட்டவிரோத செயல்களை செய்யும் கும்பலில் நடக்கும் துரோகம், பண பரிமாற்றம், கடத்தல் போன்ற செயல்களை காட்டி, குறைந்த பட்ஜெட்டில், ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லரை கொடுத்துள்ளார், கதை எழுதி இயக்கியிருக்கும் முருகன்.
ஒரு இரவில், ஒரு பக்கம் வெற்றி, அக்ஷயா. இன்னொரு பக்கம் தங்கையை தேடும் முருகன். இவர்களைத் தேடி வரும் இன்னொரு கும்பல். ஆரம்பத்தில் குழப்பமாக செல்லும் கதையின் போக்கு, கிளைமாக்ஸை நெருங்கும் போது ஒவ்வொன்றாக தெரிய வருகிறது. எதிர்பாராத திருப்பங்களும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்குகிறது. இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
மர்ம படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ‘பகலறியான்’ பிடிக்கும்!