ஒரு டிராவல்ஸ் கம்பெனியில் கார் டிரைவராகவும்,ரியல் எஸ்டேட் பிசினஸை சைடாகவும் நடத்தி வருகிறார் ரங்கராஜ் ( பார்த்திபன்). காசு விஷயத்தில் கெட்டி என்றாலும் குடிகாரர். விபத்து ஒன்றில் சிக்கியதால் காலில் சின்னதா ஊனம். இவருக்கு ஒருநாள் லண்டனில் இருந்து வரும் கெவினின் (சாந்தனு) அறிமுகம் கிடைக்கிறது.கெவின் சென்னையில் சில நாட்கள் தங்கி ஒரு பெரிய இடத்தை விலைக்கு வாங்கும் முயற்சிக்காக வந்திருக்கிறார்.தனக்கு தங்க ஹோம்லியான இடம் வேண்டும் என நினைக்கும் சாந்தனுவை,,பார்த்திபன் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்க வைக்கிறார். சாந்தனுவும் பார்த்திபனின் பேச்சில் மயங்கி, அவர் சொல்லும் இடத்திலேயே தங்க முடிவு செய்கிறார்.அந்த வீட்டில் வேலை பார்க்கும் பார்வதி நாயரை பார்த்தவுடன் சாந்தனுவுக்குப் பிடிக்கிறது. பார்வதிநாயர் மீது மோகம் கொள்ளும் அளவுக்கு பார்வதியின் நடவடிக்கைகளும் அமைய, நிஜமாகவே சாந்தனுவுக்கு பார்வதி மீது ஒரு கண் விழுகிறது.இந்நிலையில், தன்னைவிட, இருபத்தோறு வயது வித்தியாசமுள்ள பார்வதிநாயரை தன் மனைவி என்கிறார் பார்த்திபன். இதைக்கேட்டு அதிர்ச்சியடைகிறார் சாந்தனு,மேலும்,தான் ஒரு விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பால் தன்னால் இனிமேல் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத நிலைமையில் உள்ளதாகவும் சொல்ல சாந்தனுவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனாலும் பார்வதி மீதான மோகம் சாந்தனுவுக்குள் கூடிக் கொண்டே போகிறது.இந்நிலையில்,பார்வதிக்கு டென்ஷனான நேரங்களிலெல்லாம் வலிப்பு நோய் வரத் தொடங்குகிறது. இந்த நோய்க்கான காரணம் பார்வதிக்கு கணவனிடமிருந்து ‘எதுவும்’ கிடைக்காதது தான் என்று டாக்டர் சொல்கிறார். இதையடுத்து சாந்தனுவுக்கு பார்வதிநாயர் மீது பரிதாபம் ஏற்படுகிறது.
ஒரு நாள் திடீரென்று பார்வதிக்கு ‘வலிப்பு’ வந்துவிட.. அந்த நேரத்தில் சாந்தனு பார்வதிக்கு பெரிதும் உதவு கிறார். அந்த உதவி அவர்களிடையே உடல்உறவு வரை கொண்டு சென்று விடுகிறது. இந்நிலையில்,சாந்தனு லண்டனுக்கு பார்வதியையும் அழைத்துச் செல்ல நினைக்கிறார். இறுதியில் என்ன நடந்தது..? சாந்தனு தான் நினைத்தபடியே பார்வதியை அழைத்துச் சென்றாரா..? பார்த்திபனின் கதி என்ன ஆனது ..? என்பது தான் மீதிக்கதை.
இந்தப் படத்தின் கடைசி 10 நிமிட கிளைமாக்ஸ் டிவிஸ்ட் தான் படத்தின் புதுமை!. பார்த்திபன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து,அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு, வித்தியாசமான கோணத்தில் யோசித்து, இப்படி முகம் சுழிக்கும் அளவுக்கான ஒரு கதையை, இப்படி துணிச்சலாக படமாக்கியிருக்கும் பார்த்திபனை பாராட்டுவதா ? அல்லது வசைபாடுவதா ? அதை ரசிகர்களின் முடிவுக்கே விட்டு விடுவோம்.இப்படத்தின் நாயகன் சாந்தனு, இப்படத்தில் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடனத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். பார்த்திபன், சாந்தனுவிடம் நன்றாக வேலை வாங்கியிருப்பது மிக நன்றாகவே புரிகிறது.இந்தப்படத்தில் தான் ஒரு ரியல் ஹீரோவுக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார் சாந்தனு ஆரம்பம் முதல் .திரைக்கதையின் போக்கில் மெல்ல…மெல்ல…ஒரு இயல்புத் தன்மையுடன் கதை நகர்வதைப் பார்க்கும்போதே நமக்குள் ஒருபரபரப்பு தொற்றிக் கொள்கிறது. மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி பார்வதி நாயர். அவருடைய தோற்றத்தை விட, நடிப்பு மிக பிரமாதம்! ஆரம்பம் முதல் இறுதி வரை இவருடைய கதாபாத்திரம் மர்மமாகவே செல்வது சிறப்பு. தம்பி ராமையா,சிம்ரன் தங்களது பங்கினை கச்சிதமாக செய்துள்ளனர்.அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். படத் தொகுப்பாளரும் தனது பணியை பார்த்திபன் பாணியில் செய்திருக்கிறார். சத்யாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத இப்படத்தை, உண்மையில் ரசிகர்கள் நினைத்தால் மட்டுமே ———— இடங்களை நிரப்ப முடியும் என்பது நிதர்சனமான உண்மை!