கதை வெற்றி மாறனுடையது ,திரைக்கதை வசனம் இயக்கம் இவையெல்லாம் அவரது சீடர் துரை செந்தில் குமாருடையது. சில வெற்றிப் படங்கள் இவரது பட்டியலில் இருக்கிறது.
சசிகுமார் ,சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன்,இயக்குநர் ஆர். வி. உதயகுமார், மைம் கோபி, வடிவுக்கரசி, ரோஷ்னி , பிரிகிதா,ரேவதி ஷர்மா, சுஷிவதா ஆகியோருடன் சூரி மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிற படம்தான் ‘கருடன்.’ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன். இசை யுவன் சங்கர் ராஜா.
மற்றபடி நீ உயரமா, நான் உயரமா என்கிற சூப்பர் சண்டைக்கு சிண்டு முடிகிற கதை இல்லை. நிம்மதி.! ஆனாலும் சூரிக்காக நடந்த புரமோஷன் லெவல் வேற மாதிரி இருந்தது. படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியது என்னவோ உண்மைதான்.!
காகமா ,கருடனா ? சூரிக்காக நடந்த பட்டம் கட்டுதல் வேலை நியாயமானதுதானா ?தொடர்ந்து படியுங்கள் !
தேனி ,கோம்பைக்கு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சொந்தமான பரந்து விரிந்த நிலம் சென்னையில் இருக்கிறது. அதன் பட்டயத்தை ஆட்டை போட்டு நிலத்தை தேட்டை போட பார்க்கிறார் அமைச்சர் ஆர். வி. உதயகுமார். சரியான தேர்வு. பகட்டு ,பந்தா,திமிர் ,தெனாவட்டு ,கம்பீரமான குரல் இத்தனையும் ஊழல் புத்திரனாக முத்திரை குத்தி காட்டுகிறது. இந்த தார்ப்பாய் சுருட்டியின் நிலச் சுருட்டலுக்கு பாசமும் நேசமும் பந்தமும் வைத்துள்ள நண்பர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் பலியாவதுதான் கதை. புதுசு என்று சொல்ல முடியாது. காட்சி அமைப்புகள் வழியாக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்.! கோடை வெயிலில் வறண்டு கிடந்த பூமியில், மேகம் கீறி மழை பொழிந்த மாதிரி இருக்கிறது.
அனாதையாக கிடந்த சிறுவனுக்கு சொக்கன் எனப் பெயர் சூட்டி சொந்த பிள்ளை மாதிரி சூரியை வளர்க்கிறார் அப்பத்தா வடிவுக்கரசி. செஞ்சோற்றுக் கடன் . அந்த குடும்பத்து புத்திரன் உன்னி முகுந்தனின் வலக்கை !. சூரிக்கான கேரக்டர் ,பில்டப் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். தகுதியானவர்தான் என்பதை அவரும் நடித்து ,உழைத்து நிரூபிக்கிறார். மைம் கோபியை போட்டுத்தள்ளும் காட்சி இயக்குநர் ஹரி படக் காட்சியை நினைவூட்டினாலும் சூரி டாப்புதான்.!சொக்கா .. மதுரையின் மானத்தைக் காப்பாத்திட்டே !!!
சசிக்குமார்தான் கதையின் நாயகன் ,துணை நாயகன் உன்னி முகுந்தன் ( நல்ல தேர்வு ). இவர்களுக்கிடையேயான பாசமும் பந்தமும்தான் கதை. நாலும் தெரிந்த நல்லவரான சசி உடன் பிறவா உன்னியின் சூழ்ச்சிக்கு இரையாகி கதையில் உயர்ந்து நிற்கிறார். பொது இடத்தை ஆட்டையைப் போடுவதற்காக அரசியல்வாதிகள் எந்த அளவுக்குப் போவார்கள் என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார்கள். உன்னியின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. இவருக்குள் இருந்த அரக்கன் எப்போது வெளியாகிறான் என்பதை காட்டியிருந்தாலும் அழுத்தம் போதவில்லை என்பது எனது கருத்து.
மைம் கோபி சிறந்த நடிகர் . அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார் ,பாராட்டுவோம்.
நாயகிகள் நால்வரும் நல்ல தேர்வு.
சமுத்திரக்கனி இன்ஸ்பெக்டராக வருகிறார். இலாகாவில் நடக்கிற அநியாய அக்கிரமங்களை கண்டு கொதிக்கிறார். ஆனாலும் தடுக்க முடியவில்லை. தவிக்கிறார். விட்டுத்தொலையவும் வழியில்லை.வியாரெஸ் கொடுத்து வெளியேற நினைப்பவரை எஸ்பி தடுப்பதற்கான காரணம் சவலைத்தனமாக இருக்கிறது. நட்பு ரீதியில் கனியை கதைக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றே ஊகிக்க முடிகிறது.
இசை யுவன் . ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன். கதையோட்டத்துக்கு இருவரும் துணையாக இருக்கிறார்கள். என்றாலும் வில்சன் முதலிடம் .
கருடன் எனப் பெயர் வைத்தது சரிதானா? ஒருமுறை பார்த்துவிட்டு தீர்ப்பு எழுதுங்கள் !
பில்டப் கொடுத்த அளவுக்கு இல்லை !
–தேவிமணி.