பி யுகேஸ்வரன் தயாரிப்பில், முகமது ஆசிப் ஹமீது இயக்கியிருக்கும் படம், தி அக்காலி. இதில், நாசர், ஜெய்குமார், ‘தலைவாசல்’ விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர் ,யாமினி, தாரணி , பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலி, மனிஷா சபீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ட்ரக்ஸ், க்ரைம், பிளாக் மேஜிக், ஹியூமன் சாக்ரிஃபைஸ் இப்படி எல்லாவற்றையும் சொல்லும் ‘தி அக்காலி’ , ஒரு வித்தியாசமான, எந்த வகையான படம் என்பதே தெரியாத அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ள படம்.
போதை கடத்தல் கும்பலை பிடிக்க, காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவிற்கு, ஒரு மயானத்தில் அந்த கும்பலின் நடமாட்டம் இருப்பது தெரியவர, காவல்துறை குழுவினர் செல்கின்றனர். அங்கே பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதையும், சாத்தானை வழிபடும் குழுவினர், பூஜைகள் செய்திருப்பதும் தெரிய வருகிறது. அதோடு, நரபலி கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. அதிர்ச்சியடையும் ஜெய்குமார், அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, பல திடிக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது அது என்ன என்பது தான், ‘தி அக்காலி’ படத்தின் கதை.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், அவரின் கீழ் விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நடித்திருக்கும் நாசர்,
ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் படத்தின் கதைக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள். இதில், தாரணி, யாமினி, அர்ஜய் ஆகியோர் சிறப்பு கவனம் பெறுகின்றனர்.
வினோத் கிஷன், நாசர் ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பும், அவர்கள் நடித்த விதமும் அந்த கதாபாத்திரங்களுக்கு வலிமை சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் கிரி முர்பியின் ஒளிப்பதிவு, திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருப்பதோடு பய உணர்வினை ஏற்படுத்துகிறது.
கலை இயக்குநர் தோட்டா தரணியின் அரங்க வடிவமைப்புடன், VFX இணைந்து காட்சிகளுக்கு திகில் கொடுக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் முகமது ஆசிப் ஹமீத், நரபலி என்ற கதைக்களத்தை வித்தியாசமான பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அது சில இடங்களில் மட்டுமே எடுபடுகிறது. சோர்வினை உருவாக்கும் திரைக்கதை. கதை எதை நோக்கி செல்கிறது? என்ற புரியாத நிலை. இவைகளை தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மற்றபடி ‘தி அக்காலி’ பற்றி சொல்றதுக்கு ஒன்னுமில்லை!