கடந்த வருடம் ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதையடுத்து மீண்டும் இந்த வருடம் மாணவ மாணவிகளை சந்திக்கவுள்ளார். இந்த முறை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கவுள்ளதாகவும் ஜூனில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வரும் ஜூன் 28, மற்றும் ஜூலை 3 ஆம் தேதிகளில் இரு கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டவுள்ளார். இது குறித்து தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாராட்ட உள்ளார். முதல் கட்டமாக 28 .6 .2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை ,தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்ட பெறுகிறார்கள், அதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக வரும் 3 7 2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்ட பெறுகிறார்கள், நடிகர் விஜய் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில், சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்