வருகிற 2௦ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக மௌன அறவழி போராட்டம் நடத்த உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது . தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது .அவர்கள் லட்சக்கணக்கில் திரண்டு ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி பல்வேறு போராட்டங்களில் எடுபட்டு வருகின்றனர். திரையுலகினரும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர் இந்நிலையில், இது தொடர்பாக இன்று மாலைநடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் துணைத் தலைவர் பொன்வண்ணன் பேசியதாவது,
இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் !இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து இன்றுவரை நமது தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது.அதை நடத்த விடாமல் பலவருடங்களாக நீதி மன்றங்கள் மூலம் தடைகளும் , அதை நாம் மீட்டு ,ஜல்லிக்கட்டு நடத்துவதுமாக இருந்து வருகிறோம்.கடந்த மூன்று வருடம் அதுவும் நடக்காமல் தமிழர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். “ பொறுத்தது போதும் “ என்று இன்று தமிழர்கள் பொங்கி அதற்கு நிரந்தர தீர்வுக்காக எழுந்துள்ளனர்.குறிப்பாக மண்ணின் மைந்தர்கள் , மாணவர்கள் ,இளைஞர்கள் இன உணர்வை வெளிபடுத்த தமிழகமெங்கும் களமிறங்க போராடி வருகிறார்கள். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகம் கண்டுள்ள மிகப்பெரிய மாணவர்கள் போராட்டமாக மாறி உள்ளது. இந்த ஒற்றுமை எங்களுக்கு பெரும் மகிழ்வை தருகிறது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற 2௦ஆம் தேதி காலை 8மணி முதல் மாலை 6 மணி வரை சங்க வளாகத்தில் உணர்வை வெளிபடுத்தும் வகையில் மௌன அறவழி போராட்டத்தை அறிவிக்கிறோம்.மாணவர்கள் பின்னால் இருந்து மத்திய அரசுக்கும் , சட்டதுறைக்கும் அழுத்தம் தந்து , “ ஜல்லிகட்டுக்கு நிரந்திர தீர்வை “ பெறும் வரை போராடுவது என தீர்மானித்திருக்கிறோம் !தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இன உணர்வுப் போராட்டமாக நடைபெறும். அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பவுள்ளோம். அனைத்து நடிகர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.