விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது .அதேசமயம் எந்த கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது என நடிகர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியிட்ட கட்சி தொடக்க அறிவிப்புக்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர் விஜய் விரைவில், கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்களை தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக கழக உள்கட்ட அமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணங்கள் என்று, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு. என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும், உள்ளாட்சி தேர்தல் உள்பட எந்த தேர்தலிலும் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடாது என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்