தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்பினர் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இன்று காலை சென்னை அண்ணாசாலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது, “என் இனிய தமிழ் மக்களே.. என அழைப்பதற்கு இது தான் சரியான தருணம் என நினைக்கிறேன். 1962-ல் மாணவர்களால் இந்த மண்ணில் மிகப்பெரிய பிரளயம் நடந்தது. அதற்குப் பிறகு பல பிரச்சினைகள் நடந்தன. ஆனால், தற்போது எரியும் தீ, யாரும் பற்ற வைக்கவில்லை.இது ஒரு மூங்கில் காட்டுத் தீ. இந்த தீயை அணைப்பது சாதாரண விஷயமல்ல. மேலிடத்தில் இருப்பவர்கள் இந்த எரிமலையைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தமிழர்கள் போராடிப் பார்த்தார்கள். சில நாட்களில் அப்போராட்டம் அமுங்கிவிடும். நமது உணர்வுகளுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது.தற்போது இந்த மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தான் மானமுள்ள தமிழனுக்கான போராட்டம். இடையில் நாம் நிறைய விஷயங்களில் போராடித் தோற்றுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமிழகத்துக்கு பெற வேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும். இந்த வெளிச்சத்திலே நம்மால் முடியும்.1962-ல் இந்தி எதிர்ப்புக்கு தான் இவ்வளவு பெரிய பிரளயம் ஏற்பட்டது. எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் தற்போது மீண்டும் அதே போன்றதொரு பிரளயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவர் சமுதாயத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மாணவர்களுக்கு தலை வணங்க வேண்டும். பீட்டா என்ற எங்களுக்கு சம்பந்தமில்லாத அமைப்பு, எங்களின் கலாச்சாரத்தின் மீது கை வைக்கிறதே, எங்களின் பண்பாட்டின் மீது கை வைக்கிறதே. அது தான் எங்களுக்கு எரிகிறது.
மாணவர்களே.. இந்த தீ சாதாரண தீ அல்ல. மிகப் பிரமாண்டமாக ஒரு யாகத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களது கோரிக்கை இந்த ஒன்றாக மட்டும் இருக்கக் கூடாது. தமிழன் என்ற அடையாளத்தை எங்கெல்லாம் தவற விட்டோமோ அவற்றைப் மீட்டெடுக்க வேண்டிய சரியான தருணம் இது. டெல்டா விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் அதற்கு ஒரு முடிவு பிறக்க வேண்டும். தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரத்துக்கு எங்கேயும் ஒரு கீறல் ஏற்பட்டாலும், நீங்கள் எழுந்து நின்று போராட வேண்டும். நமது அனைத்து உரிமைகளையும் பெற்றுவிட்டு தான் இந்தப் போராட்டத்தை முடிக்க வேண்டும்”இவ்வாறு அவர் பேசினார்.