ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்து போராடி, இன்று உலகமே வியக்கும் அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.அதற்கு முன்னதாக இசைஞானி இளையராஜா, மாணவர்களின் போராட்டத்தை வாழ்த்தி வீடியோ பதி வாக இன்று வெளியிட்டுள்ளார். அதில்,அவர் கூறியிருப்பதாவது: ‘மாணவர்களே, இளைஞர்களே… இந்த உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் இந்த போராட்டத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு தலைவன் இல்லாமல், இவ்வளவு அமைதியான ஒரு கட்சியின் துணையில்லாமல் வேறு எந்த இயக்கங்களின் ஆதரவும் இல்லாமல், ஆதரவையும் நாடாமல், யாரும் வரக் கூடாது என்று தடை செய்துவிட்டு நீங்களாகவே நடத்துவது உங்களுக்கு இருக்கக் கூடிய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தை, இந்த போராட்ட வழியை கண்டிப்பாக இந்த உலகம் பின்பற்றப் போகிறது. உலகத்திற்கே வழிகாட்டியாக நீங்கள் மாறிவிட்டீர்கள். இவ்வளவு உணர்ச்சியும் உத்வேகமும் உள் உணர்வும் உங்களுக்குள்ளே இத்தனை நாள் வரை பதுங்கிக் கிடந்தது, இப்போது வெளியே வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இது தொடரட்டும்… நீண்டு தொடரட்டும்.இடையிலே புகுந்து சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், இயக்கங்கள் மீட்டர் போடப் பார்த்தார்கள். அவையெல்லாம் பலிக்கவில்லை. பொதுமக்கள் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். மாணவர்களே, இந்த ஒற்றுமை, உணர்விலே நீங்கள் ஒன்றியிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும். இந்த வெற்றியை நாங்கள்தான் பெற்றுத் தந்தோம் என்று யாரும் இடையில் புகுந்து சொந்தம் கொண்டாட முடியாத அளவுக்கு உள்ளது உங்கள் ஒற்றுமை. உங்கள் ஒற்றுமையை, உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலே சிலர் இப்போது வந்துவிடும் சட்டம், நாளை வந்துவிடும் தீர்ப்பு என்றெல்லாம் சொல்லி உங்களை கலைந்து போகச் செய்யப் பார்ப்பார்கள். ஆனால் இறுதியான தீர்ப்பு வரும் வரை உங்கள் போராட்டம் ஓயக் கூடாது, உறுதி கலைந்துவிடக் கூடாது என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லை. அது உங்களுக்கே புரிந்துவிடும். நீங்களே செய்வீர்கள். நானாக இருந்து உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. வேறு ஒருவரும் உங்களுக்கு அந்த உணர்வை ஊட்டவேண்டியதில்லை. ஏனென்றால் அந்த உணர்வு உங்கள் உடன் பிறந்தது. உங்களுடனே இருப்பது. மிகவும் சக்தி வாய்ந்தது. பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள் என்பதை நினைந்து நினைந்து நான் மகிழ்கிறேன்,” என்று கூறியுள்ளார்.