ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது என முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார். நாளை அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் (ஜனவரி-16) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக அங்கு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இதனையடுத்து அலங்காநல்லூரில் பொதுமக்கள் திரண்டு தொடர் அறப்போராட்டத்தை நடத்தினர் இங்கு வெடித்த போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இப்போராட்டம் சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டமாக உச்சம் தொட்டது. மாநில, மத்திய அரசுகள் மிரண்டு போயின. தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டமாக வெடித்து 5 நாட்களை கடந்து, எந்தவித சோர்வும் இல்லாமல் போராட்டம்தொடர்ந்தது.இந்நிலையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று நேற்று அறிவித்தார். அதன்படி இன்று தமிழக கவர்னர் பொறுப்பை கவனிக்கும் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் இதற்காக மும்பையில் இருந்து அவசரமாக சென்னை திரும்பி, ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டத்தை பிறப்பித்தார்.அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக நீடித்து வந்த தடையானது நீங்கியது. 3 ஆண்டுகளுக்கு பின்னர் வாடிவாசல் திறக்கப்பட உள்ளது. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டது.இந்த அவசரச் சட்டமானது 6 மாத காலங்களுக்கு செல்லும்.இதற்கிடையில், மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு கமிட்டி குழுவினரும் போட்டியை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழக முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 8.45 மணிக்கு மதுரை செல்கிறார். அங்கு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.