இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன். படத்தை ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தில் ஏ.ஐ தொழில் நுட்பத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதாக கூறப்படுவது பற்றி இயக்குனர் விஜய் மில்டன் ஊடகம் ஒன்றில் கூறியுள்ளதாவது,”இப்படத்தில் முதலில் நாங்கள் கேப்டன் விஜயகாந்த்தை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம். இது தொடர்பாக அவரது மனைவி பிரேமலதாவிடம் உரிய அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்தது . முடிவில் கேப்டனின் உடல்நிலை கருதி, அவரது அறையிலேயே ‘ஐபோன்’ வைத்து எடுத்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்றைய தொழில்நுட்பத்தை வைத்து அந்த காட்சியை டெவலப் செய்து கொள்ளலாம் எனவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் கேப்டன் மறைந்து விட்டார்.இதனால்தான் அவரது கதாபாத்திரத்தில் சத்யராஜ் சார் நடித்துள்ளார். ஆனாலும் எனக்கு கேப்டன் விஜயகாந்த் மீது அன்பு இருப்பதால் இந்த படத்தில் அவர் இருக்கும் படியாக ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் ஒரு நடிகர் மட்டும் இல்லை. அவர் ஒரு தலைவர். அவரை ஒரு வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவது தவறு. எங்கள் படத்தில் முதலில் கேப்டன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்காத காரணத்தால் அவருக்கு பதிலாக சத்யராஜ் சார் நடித்துள்ளார். எனக்கு கேப்டன் விஜயகாந்த்தை மிகவும் பிடிக்கும். அவர் மீதான அன்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளேன். ஒருவர் மீது அன்பு வைக்க யாரிடமும் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் மட்டும் இல்லாமல் எனக்கு பிடித்த நடிகை சௌந்தர்யா இடம் பெறுவதை போன்றும் காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல்தான் நடிகை பாவனா. எனது நண்பர். எனக்கு மிகவும் பிடிக்கும், தீபாவளி படத்திற்காக பணியாற்றும்போது என்னிடம் நன்றாக பழகினார். பாவனா இந்த படத்தில் வருவதைப் போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என நம்புகின்றேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்