ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் தொடர்பான கலவரம், போலீஸ் தடியடி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்று காலை நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது,
தமிழகமுதல்வர் அலங்காநல்லூர் செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்று பயமாக இருந்தது. நமது முதல்வரை யாரும் தவறாக பேசிவிடக் கூடாது அல்லவா. இது குறித்து அவருடன் சென்றவர்களோடு பேசிக் கொண்டே இருந்தேன். அவர் அங்கிருந்து திரும்பியவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன். சட்டத்தை நிறைவேற்றிவிட்டு வந்து போராட்டக்காரர்களைப் பார்ப்பதாக சொன்னார்.
எனக்கும் அது நியாயமாகப் பட்டது. அதற்குள் இப்படி நடந்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடிய மாணவர்கள் நிறைய கோரிக்கைகள் கேட்கிறார்கள் என்றார்கள்.அவர்களின் உள்ளே இருக்கும் குமுறல்களின் பட்டியல்தான் அது. கேட்க வேண்டியது அவர்களின் கடமை.அரசியலில் இறங்குவீர்களா என கேட்கிறார்கள், இது கூட அரசியல் தான் .அரசியலுக்கு வந்துவிட்டு போக வேண்டுமே தவிர, அங்கேயே இருந்துவிடக் கூடாது. எங்களுக்கு எல்லாம் வேறு வேலை இருக்கிறது. தெரியாதை வேலையை நான் ஏன் செய்து கொண்டு இருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதெல்லாம் செய்துள்ளனர். ஆனால், அதோட வரிசை முறை மாறிவிட்டது என நான் நினைக்கிறேன். அது சரிதானா என்று சொல்வதற்கு எனக்கு அனுபவம் கிடையாது. அரசியலை வெளியே இருந்து பாமரனாக பார்த்தவன், ஆகையால் எனக்கு அந்த தகுதி கிடையாது. தற்போது நான் சொல்வது என் அனுபவம்.’விருமாண்டி’ படத்துக்காக அலங்காநல்லூரில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. ஆகையால், சென்னையில் அலங்காநல்லூரை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தினோம். நிஜமாகவே ஏறுதழுவியன் நான்.
மாணவர்களை தேச விரோதிகள் மற்றும் சமூக விரோதிகள் என ஒதுக்க வேண்டாம். நான் பார்த்த வீடியோக்கள் எல்லாம் நிஜமாக இருக்கக் கூடாது என்ற சிறிய பதற்றம் எனக்கு இருக்கிறது. மாணவர்களிடையே எப்படி தீயவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களோ, அதே போல் காவல்துறையிலும் சில தீயவர்கள் இருப்பார்கள். அனைத்து துறையிலும் தீயவர்கள் இருப்பார்கள். காவல்துறையில் மிகவும் குறைவு என நம்புவோம்.மீண்டும் மாணவர்கள் ஏதாவது போராட்டத்தில் ஈடுபடுவார்களா எனக் கேட்கிறார்கள், நியாயமான போராட்டத்துக்கு மீண்டும் மாணவர்கள் கண்டிப்பாக வருவார்கள். விவசாயிகளை பாதுகாப்பது தமிழகத்தின் பொறுப்பல்ல, உலகத்தின் பொறுப்பு. விவசாயிகளை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்”இவ்வாறு அவர் கூறினார்.