தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சரண்ராஜ், வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என்று பல்வேறு வேடங்களில் நடித்திருப்பதோடு, ’அண்ணன் தங்கச்சி’, ‘எதார்த பிரேம கதா’ போன்ற படங்கள் மூலம் இயக்குநராகவும் கவனம் ஈர்த்தவர், தற்போது ‘குப்பன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
இதில் சரண்ராஜின் இளையமகன் தேவ் நாயகனாக அறிமுகமாகிறார். மற்றொரு நாயகனாக ஆதிராம் அறிமுகமாகிறார். நாயகியாக அறிமுக நடிகை சுஷ்மிதா நடிக்க, மற்றொரு நாயகியாக பிரியா அருணாச்சலம் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் சரண்ராஜ் நடித்திருக்கிறார்.
சோனி ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்.ஒய்.சரண்ராஜ் இயக்க, அறிமுக இசையமைப்பாளர் எஸ்.ஜி.இளை இசையமைக்கிறார். ஆர்.ஜனார்த்தனன் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.அஹமத் படத்தொகுப்பு செய்கிறார். ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, நடனக் காட்சிகளை டயானா வடிவமைத்திருக்கிறார். இணை இயக்குநராக பணியாற்றியிருக்கும் கே.சுரேஷ் குமார் பாடல்களையும் எழுதியுள்ளார். கலை செல்வி ஒப்பனை பணியை கவனித்துள்ளார். புரொடக்ஷன் டிசைனராக தங்கராஜ் பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக ஜான்சன் பணியாற்றுகிறார். டிசைனராக வெங்கட் பாபு பணியாற்றுகிறார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘குப்பன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் தேஜ் சரண், தயாரிப்பாளர் அஸ்வத் ஆகியோருடன் படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் நடிகர் சரண்ராஜ் பேசுகையில்,
வேலை எதுவும் இல்லனா, எதாவது ஒண்ணு உருப்படியா பண்ணுடான்னு பெரியவங்க சொல்வாங்க. அதுபோல், நடிப்பு தான் எனக்கு தெரியும், கை நிறைய பணம் கொடுத்தால் கூட எண்ண தெரியாது. ஆனால் நடிக்க கூப்பிட்டால், இரவு பகலாக நடிப்பேன்.
என்னால் சும்மா வீட்டில் உட்கார முடியாது.
600 படங்களில் நடித்துவிட்டேன், அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டேன். இப்போது இசை, இயக்கம், கதை என்று பண்ணிட்டு இருக்கேன்.
நான் வழக்கமா வீட்ல இருந்தா மாலை நேரம் நாயை கூட்டிட்டு பீச் வழியாக போவேன், தனியாக ஒரு இடத்தில் இருக்கும் படகில் உட்கார்ந்து நாய் கூட விளையாடுவேன். அங்கே ஒரு நண்பர் குப்பன் எனக்கு பழக்கம். சின்ன குப்பன் என்று அழைப்பார்கள். நான் எப்போ போனாலும் அவரும் வருவார், அவருடன் பேசிட்டு இருப்பேன். ஒரு நாள் என் கிட்ட வந்து நீங்க சினிமாவில் 30 வருடங்களாக இருக்கிறீர்கள், ஆனால் மீனவர்கள் பற்றி, அவங்க வாழ்க்கை பற்றி படம் பண்ண மாட்றீங்களே என்று வருந்தி சொன்னார். கடல் பற்றி, மீனவர்கள் கஷ்ட்டப்படுவதை படம் பண்ணுங்கன்னு சொன்னார்.
அன்று இரவு முழுவதும் அதை தான் யோசித்தேன், சரி மீனவர்கள் பற்றி என்ன கதை எழுத முடியும் என்று யோசித்தேன். 12 மணிக்கு ஒரு லைன் வந்தது, ஒரு மீன் பிடிக்கிற பையன், ஒரு ஜெயின் பெண், சைவம் – அசைவம், இங்கு என்ன நடக்குது, அது தான் ’குப்பன்’.
கதை ரெடியான போது தான் கொரோனா வந்தது, நம்ம பைலட் பத்து நாட்கள் டெல்லி, பத்து நாட்கள் மும்பை என்று சுற்றி கொண்டிருந்தார் அப்போது நான் சொன்னேன், இப்படி ஊர் ஊராக சுற்றுவதை விட்டுட்டு, ஐதரபாத்தில் என் நண்பர் இருக்கிறார். அவரிடம் சென்று நடிப்பி பயிற்சி எடுத்துக்கொள் என்றேன், உடனே அவன் அங்கு சென்றுவிட்டான். என் நண்பன் என்னிடம் நீ இவன ஹீரோவாக்குறத விட்டுட்டு பைலட்டாக்கிட்டியே, என்று சொன்னார். பசங்க என்ன கேட்கிறார்களோ அதை தானே செய்ய முடியும். என் பெரிய பையன் ஹீரோவாக வேண்டும் என்றார் ஹீரோவாக்கினேன், இவர் பைலட் ஆக வேண்டும் என்று சொன்னார் பைலட்டாக்கி விட்டேன், என் மகள் இண்டரியர் டிசைனராக வேண்டும் என்று சொன்னார் அதன்படி செய்தேன். பிள்ளைகள் என்னவாக ஆசைப்படுகிறார்களோ அதை நிறைவேற்றுவது தானே தந்தையின் கடமை, அதை தான் நான் செய்தேன். அப்படி என் நண்பரிடம் மூன்று மாதங்கள் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டவர், வீடு திரும்பி வந்தார், அப்போது அவரை பார்த்தபோது எனக்கு நம்ம கதைக்கு சரியாக இருப்பானே என்று தோன்றியது. உடனே அலுவலகம் வர சொன்னேன். அதற்கு முன்பு ஹீரோவாக யாரை போடலாம் என்று பலரை பரிசீலித்தோம், ஆனால் எதுவும் செட்டாகவில்லை. தேவ் அலுவலகம் வந்த போது நம்ம கதைக்கு இவன் தான் ஹீரோ என்றேன், சுரேஷ் உடனே ஓகே சொல்லிவிட்டார். உடனே, தேவுக்கு சுரேஷை கதை சொல்ல சொன்னேன், கதை கேட்டதும் அவருக்கு பிடித்துவிட்டது. இப்படி தான் இந்த படம் தொடங்கியது.
சின்ன வயதில் இருந்தே தேவ் நடனம், பாட்டு என அனைத்தையும் செய்வார், அப்போது என் கலை வாரிசாக இவன் தான் வருவான் என்று நினைத்தேன். ஆனால், பெரிய பையன் ஹீரோவாகி விட்டான், இவன் பைலட்டாகி விட்டான். இன்று இவனே மீண்டும் ஹீரோவாக திரும்ப வந்துட்டான். இப்படி தான் தேவ் நாயகன் ஆனான்.
படத்திற்கு இரண்டாவது ஹீரோவை தேட வேண்டி இருந்தது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர்,
என் பையன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான், அவன நீங்க கொஞ்சம் பாருங்க, ஆனால் ஆள் கொஞ்சம் குள்ளமாக இருப்பான்” என்று சொன்னார். அவர் வந்தார், ஆள் நன்றாக இருந்தார், ராப் பாட்டு பாடுகிறார், நன்றாக பேசுகிறார், அவர் இரண்டாவது ஹீரோவுக்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது, அதனால் அவரை ஒப்பந்தம் செய்தோம். பிறகு நாயகி தேர்வு செய்ய தொடங்கிய போது சுஷ்மிதா வந்தார், கதைக்கு பொருத்தமாக அவர் ஜெயின் பெண் போல் இருந்ததால் அவரை ஒப்பந்தம் செய்தோம். பிறகு என் நண்பர் மூலம் டிரம்மராக அறிமுகமாகனவரை படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தோம். இப்படி படம் முழுவதும் இளைஞர்கள் தான் பணியாற்றுகிறார்கள். இது முழுக்க முழுக்க யூத்துக்கான படம்.
இன்று ஒரு படம் தயாரிப்பது எளிதாகிவிட்டது, ஆனால் அதை திரைக்கு கொண்டு வருவது மிகவும் கடினம். அதைவிட கடினம் தியேட்டருக்கு மக்கள் வருவது தான். ஊடகங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நல்லபடியாக எழுதினாலும், தியேட்டருக்கு மக்கள் வருவது பெரிய விசயமாக இருக்கிறது. அதே சமயம், நல்ல படங்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் நன்றாக இருந்தது. கமல் சாரின் விக்ரம் அதிரடி ஆக்ஷன் படமாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியன் 2 படத்தில் என்னை நடிக்க ஷங்கர் அழைத்தார், கால்சீட் பிரச்சனையால் என்னால் நடிக்க முடியவில்லை. படம் பார்த்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது. ஷங்கர் படம் போலவே இல்லை, இதை நான் சர்ச்சைக்காக சொல்லவில்லை. சங்கர் என்னுடைய பையன் தான், அவருடன் சேர்ந்து நிறைய பணியாற்றியிருக்கிறேன். ஆனால், இந்தியன் 2 படம் ஷங்கர் இயக்கிய படம் போலவே இல்லை.
கமல் சார் தனி ஆளாக எவ்வளவு நேரம் தான் படத்தை தாங்குவார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், படம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நன்றாக இல்லை என்றால் மக்கள் நிராகரித்து விடுவார்கள். நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தை ஓட வைப்பதற்காகவோ அல்லது பெரிய படம் என்று காட்டுவதற்காகவோ எதையும் திணிக்கவில்லை. கதைக்கு என்ன தேவையோ, எப்படிப்பட்ட கமர்ஷியல் விசயங்கள் தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொண்டு மக்களுக்கு பிடித்த படமாக கொடுத்திருக்கிறோம், நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்னுடைய பெரிய மகன் தேஜை வைத்து அடுத்த படம் பண்ண போகிறோம், இந்த நேரத்தில் உதவி இயக்குநர்களுக்கு ஒரு அறிவிப்பு, நல்ல வித்தியாசமான கதை வைத்திருப்பவர்கள் தேஜை சந்தித்து சொல்லலாம், அவருக்கு கதை பிடித்திருந்தால் அந்த படத்தை நாங்களே தயாரிக்க ரெடியாக இருக்கிறோம். அடுத்த மாதத்திலேயே படப்பிடிப்பு தொடங்கவும் தயாராக இருக்கிறோம், ஆனால் கதை தேஜுக்கு பிடிக்க வேண்டும். எனக்கு எப்போதும் ஆதரவு கொடுக்கும் பத்திரிகையாளர்கள் எனது பெரிய மகன் தேஜ் மற்றும் குப்பன் நாயகனான எனது இளைய மகன் தேவ் இருவருக்கும் ஆதரவளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
இறுதியில் ‘குப்பன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடை பெற விழா முடிவடைந்தது.