கேரளாவில் பிரபல நடிகர்கள் மீது நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், இது தொடர்பாக நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில்பதிவிட்டுள்ளதாவது,, “திரைத்துறையில், நிலவும் #MeToo பிரச்னை நெஞ்சை உடைய வைத்தது. இதற்கு உடன்படாமல் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றி பெற்ற பெண்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.பெண்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேறச் சமரசம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பாலியல் வன்கொடுமைகளைச் சந்திப்பது போன்ற விஷயங்கள் எல்லா துறைகளிலும் இருக்கின்றன. இது போன்ற பிரச்னைகளைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். ஆனால் அதைப் பெரும்பான்மையான அளவில் சுமப்பது என்னவோ பெண்கள்தான். இந்த பிரச்னைகள் தொடர்பாக என்னுடைய 24 மற்றும் 21 வயது மகள்களோடு நீண்ட நேரம் உரையாடினேன். பாலியல் ரீதியான துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று சொல்கிறார்களா, நாளை சொல்கிறார்களா என்பது இங்கு முக்கியமல்ல. அவர்கள் சொல்ல வேண்டும். உடனே சொன்னால் நியாயம் கிடைப்பதற்கான வேலைகள் இன்னும் வேகமாக நடக்கும்.இதனால், அவமானப்பட்டு விடுவமோ என்ற பயம், விமர்சனம் மற்றும் ‘நீ ஏன் செய்தாய்?’, ‘உன்னை எது செய்ய வைத்தது?’ உள்ளிட்ட கேள்விகள் சம்பந்தப்பட்டவர்களை உடைக்கலாம். பாதிக்கப்பட்டவர் எனக்கோ, உங்களுக்கோ அந்நியராக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நம்முடைய ஆதரவு தேவைப்படுகிறது. அவர் சொல்வதைக் கேட்கக் காதுகள் தேவைப்படுகின்றன. அனைவரிடம் இருந்தும் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அவர்களுடைய நெருக்கடிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பெண்ணாகவும், தாயாகவும், இத்தகைய வன்முறையால் ஏற்பட்ட காயங்கள் சதையில் மட்டுமல்ல, ஆன்மாவிலும் ஆழமாக வெட்டப்படுகின்றன.இந்தக் கொடூரச் செயல்கள் நமது நம்பிக்கை, அன்பு, வலிமை ஆகியவற்றின் அடித்தளத்தையே உலுக்குகின்றன. என் தந்தை எனக்குக் கொடுத்த பாலியல் தொல்லை பற்றிப் பேசுவதற்கு எதற்காக இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டீர்கள்? என என்னிடம் சிலர் கேட்கிறார்கள். நான் முன்பே இந்த விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எனக்கு நடந்தது, என் தொழிலை உருவாக்குவதற்கான சமரசம் அல்ல. நான் விழுந்தால் என்னைப் பிடிக்க வலிமையான கரங்களை எனக்குத் தருவதாகக் கருதும் நபரின் கைகளிலிருந்து எனக்கு இந்த பிரச்னை ஏற்பட்டது.பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கவும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவைக் காட்டவும் அனைத்து ஆண்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு வாழ்க்கையையும் அன்பையும் வழங்கிய பெண்களை மதிக்க வேண்டும். வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும். இதை அனுபவித்த அனைத்து பெண்களுடனும் நான் நிற்கிறேன். ஒரு தாயாகவும் பெண்ணாகவும்.
இது போன்ற பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தின் ஆதரவு கூட இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். சுரண்டல் இத்துடன் கண்டிப்பாக நிறுத்தப்படட்டும். பெண்களே, வெளியே வந்து பேசுங்கள். நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு விஷயம் NO- வாக இருந்தால் அது கண்டிப்பாக NO-ஆகத் தான் இருக்கவேண்டும். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை ஒருபோதும் சரிசெய்யவோ அல்லது சமரசம் செய்யவோ வேண்டாம்.” என்று பதிவிட்டிருக்கிறார்.