தமிழ்த் திரையுலகில் சமீப காலமாகத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில நடிகர்களின் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்களை கலந்தாலோசிக்க வேண்டும். என்று தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் நவ.1-ம் தேதி முதல், சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளும் நடைபெறாது, என்ற தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு கண்டனத்தை தெரிவித்தது. தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் நடந்த நடிகர் சங்க செயற் குழுவில், தயாரிப்பாளர் சங்கத்துடன் பிரச்சினைகளை பேசி தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாசர் தெரிவித்தார்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் அதன் தலைவர் நடிகர் நாசர் தலைமையில் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தொடங்கியது . இப்பொதுக்குழுவில் கலந்து கொள்ள சங்கத்தின் பொது செயலாளரும் நடிகருமான விஷால், தனது வீட்டிலிருந்து சைக்கிளிலேயே வந்தார். பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் லதாசேதுபதி, சோனியா, பசுபதி, ராஜேஷ், கோவைசரளா, காளிமுத்து, ஹேமச்சந்திரன் , சரவணன், அஜய் ரத்தினம், ரத்னாப்பா, வாசுதேவன், ஸ்ரீமன், நியமன செயற்குழு உறுப்பினர் சிங்காரவேல், ஆனந்த், லலிதா குமாரி, முத்துகிருஷ்ணன், கலியுல்லாஹ், அனந்த நாராயணன், ஆனந்த் , காளிமுத்து, அடைக்கல ராஜா, முத்துகிருஷ்ணன், பிஎல் காந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர் சச்சு என்கின்ற சரஸ்வதி, மற்றும் மன்சூர் அலிகான், லொள்ளு சபா மாறன், சார்லி, பெசன்ட் நகர் ரவி , சுவாமிநாதன், ரோகினி, சுரேஷ் சக்கரவர்த்தி, கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ரித்விகா, பவன், விச்சு ஜார்ஜ் மரியம், முல்லை கோதண்டம், கிங் காங் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காலை 8 மணி முதலே சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் வரத் தொடங்கினர். வந்திருந்தவர்களுக்கு காலை 8 மணி முதல் ‘இலவச மருத்துவ பரிசோதனை, இலவச கண் பரிசோதனை’ நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், எம். ஏ.பிரகாஷ் ஆகிய பத்து பேருக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. இதில் சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்கக் கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி நிதிதிரட்டுதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு செய்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.