திரையுலக பிரபலங்கள் மீது அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா ஊடகம் ஒன்றில்,கவிஞர் வைரமுத்து மற்றும் மறைந்த இயக்குனர் கே .பாலசந்தர் ஆகியோர் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இவ்விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து மறைமுகமாக தனது ‘எக்ஸ்’ தள பதிவில் ,”வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீதுவக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற மொழிகள் பேசுவர். பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர் போல் சிலநேரமும் காட்சியளிப்பர். தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர். இந்த நோய்க்கு ‘மெசியானிக் மருட்சிக் கோளாறு’ என்று பெயர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள் உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும். என்றும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பாடகி சுசித்ராவுக்கு தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,”திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும் யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது.
தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும், திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளை பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர் .கே.பாலச்சந்தர்.
அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்பொழுது பாடகி .சுசித்ரா, கே.பாலசந்தரை பற்றி அவதூறாகவும், அவர் புகழை களங்கப்படுத்தும் விதமாகவும் ஒரு பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும். இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். இயக்குநர் சிகரம் .கே.பாலச்சந்தரை பேட்டி என்ற பெயரில் அவரின் புகழை களங்கப்படுத்திய பாடகி சுசித்ராவை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.”