இயக்குநர் எம். ராஜேஷ் காமடியுடன் கதை சொல்லக்கூடியவர் என்கிற பெயர் கோலிவுட்டில் இருக்கிறது. ஆல் இன் ஆல் அழகுராஜா ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை கொடுத்தவர். அவரது லேட்டஸ்ட் எடிசன்தான் பிரதர். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் சினிமா டைட்டிலை தமிழில் வைத்ததால் சலுகை கிடைத்தது. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் அது நடந்தது. நடப்பது திமுக ஆட்சி என்றாலும் கலைஞரின் மகன் முதல்வர் என்றாலும் ஏனோ தமிழ் டைட்டில் என்பது மறந்துபோய்விட்டது. ( நீயே ஆங்கிலம் கலந்துதான் எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று என்னைக் குட்டுவதை உணர்கிறேன். சினிமா எவ்வழியோ அவ்வழியே யானும்.) பாரதி பாடினானே ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்பதாக !
“சரிப்பூ ,மேட்டருக்கு வா”
வந்திட்டேன் மக்களே!
ஜெயம் ரவியின் நெடிய இடைவெளிக்கு பின்னர் உறக்கம் கலைந்து வந்திருக்கிற படம். எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற இலக்குத் தெரியாமல் படைக்கப்பட்டுள்ள கதை. ஜெயம் ரவி என்கிற சிறந்த ஆளுமையை இயக்குநர் வீணடித்துவிட்டார் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.அக்காவுக்காக எதையும் செய்யத் துணிகிற இளவல் தான் ரவி. அக்கா பூமிகாவை அத்தான் அறை விட “எப்படி கை கை நீட்டுவே ?மன்னிப்பு கேட்டாதான் உன்னோட குடும்பம் நடத்துவேன்” என்று பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு அக்கா வெளிநடப்பு செய்ய ,அவர்களை சேர்த்து வைக்கும் கஷ்டமான வேலையைத்தான் ரவி செய்கிறார். அப்பாடா என நமக்கு மூச்சு விட முடிகிறது. !
பூமிகா ,சீதா (பார்த்திபன்.) சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா அருள் மோகன் ,எம். எஸ். பாஸ்கர், நட்டி,விடிவி கணேஷ் ,ராவ் ரமேஷ் ஆகியோரை வைத்துக்கொண்டு ஒரு நாடகத்தை கொடுத்திருக்கிறார்கள். கதையின் அடித்தளம் செல்லரித்துப்போன பழசு !
நமக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்பதை சோதிக்க பல காட்சிகள். தியேட்டர் மவுனமாக இருக்கிறது.ஜெயம் ரவியின் நடிப்பில் தெளிவு இருக்கிறது.
நாயகி பிரியங்காமோகன் அழகு. பூமிகா வந்தார் நடித்தார் போனார் என்று சொல்லுமளவுக்கு காட்சிகள் அமைந்துள்ளன. .
விடிவி,கணேஷ்,எம்.எஸ்.பாஸ்கர்,சதீஷ் ,சரண்யா பொன்வண்ணன்,ராவ் ரமேஷ்,சீதா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
விவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவு. அழகான ஊட்டி.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் மக்கா மிஷி பாடல் கேட்கலாம்.
எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ராஜேஷ்,
சாரி ,பிரதர்,.!
—தேவிமணி.