பெரிய அளவில் பேசப்பட்ட படம். இயக்குநர் நெல்சனின் ‘பிலமெண்ட் பிக்சர்ஸின் ‘ முதல் தயாரிப்பு என்பதினாலேயே என்னவோ இந்த ‘பிளடி பெக்கர்’தனித்த கவனத்தைப் பெற்றது. குறிப்பாக நடிகர் கவினின் பிச்சைக்கார வேடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. கவின் பின்னி பெடலெடுத்திருக்கிறார் என சில விமர்சகர்களும் கும்மி அடித்திருந்தனர். ( படத்தைப் பார்க்காமலேயே.)
ஆனால் படம் எப்படி ?,எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா ?
ஆவி , பேய் என்று நம்மை அடித்துத் துவைத்து விடுகிறார்கள். நமக்கு அதுதான் தீவாளி பரிசு.!
கபட வேடதாரி கவின். பிச்சை எடுப்பதற்கு பல வேடங்கள் போடுகிற பலே பிச்சைக்காரர். இவருக்கு ஒப்பனை செய்தவருக்கு சிறப்புப் பரிசு கொடுக்கலாம். வெகு நேர்த்தி.சிறப்பு .
சென்னை வெள்ளை மாளிகை மாதிரியான ஆடம்பர மாளிகை. அங்கே பிச்சைக்காரர் களுக்கு சிறப்பான விருந்து. நினைவு நாள் விருந்தாம் . பிச்சைக்காரர்களை அள்ளிக்கொண்டு போக, அந்த கூட்டத்துக்குள் கவினும் அடக்கம். யாருக்கும் தெரியாமல் அந்த மாளிகைக்குள் புகுந்த கவின் ஆவியோ பேயோ,அந்த கிங்ஸ் லியிடம் மாட்டிக்கொள்ள கதையும் சிக்கி விடுகிறது. பிறகென்ன பணப்பேய்களும் சேர்ந்து கொண்டு கும்மி அடிக்கின்றன. அங்கிருந்து கவின் எப்படி தப்புகிறார் என்பது மீதி கதை.! இயக்குநர் சிவபாலன் முத்துக்குமாருக்கு இது முதல் படம். சுந்தர். சி ஸ்டைலில் தம் கட்டப் பார்த்திருக்கிறார் . முடியல.
மாறுபட்ட கேரக்டர்கள் ,உருவ மாற்றங்கள் என ஆர்வமுடன் பயணிக்கிற ஆசை கவினுக்கு இருப்பது தெரிகிறது. சரியான கதையை தேர்வு செய்திருக்க வேண்டும்.
அக்சயா ஹரிஹரன் , சுனில் சுகதா, மாருதி பிரகாஷ்ராஜ், டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் எனப் பலர் நடித்திருக்கின்றனர்.இவர்கள் எந்தெந்த கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
பேயாக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி வழக்கம்போல அவரது தொனியில் பேசி இருக்கிறார். நீ( ங்கள் ) சிரித்தால் தீபாவளி. ஹோய் !
ஒரே மாளிகைக்குள் படப்பிடிப்பு என்பதால் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் , கலை இயக்குநர் மணிமொழியன் இராமதுரை ஆகியோருக்கு மெனக்கெடல் இல்லை.
இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் நம்ம சமுதாயத்துக்கு எதையோ சொல்ல முயன்று இருக்கிறார்.
அது என்ன என்பதுதான் நமக்கு தெரியவில்லை.!
–தேவிமணி
.