வீரமரணமடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான திரைப்படம் , ‘அமரன்’ . சிவகார்த்திகேயன் ,சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்த வருட தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தின் உண்மையான சமூகம் மறைக்கப்பட்டதாக பலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் இது தொடர்பான சர்ச்சைக்களுக்கு படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,”எந்த ஜானர் திரைப்படமாக இருந்தாலும் நேர்மையாக எடுத்தால் மக்கள் அதைக் கொண்டாடுவாங்கன்னு இந்தப் படத்தின் மூலமாக தெரிஞ்சுகிட்டேன். இந்த வெற்றி எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துருக்கு. இது மாதிரியான் படங்களை அடுத்தடுத்து எடுக்கறதுக்கு நம்பிக்கை இருக்கு. கதாநாயகன் ஓகே சொல்லும்போதுதான் இயக்குநர், தயாரிப்பாளரோட எண்ணத்துக்கு உயிர் கிடைக்குது.முகுந்த் ஒரு தமிழர். ஒரு தமிழ் ரூட்ஸ் இருக்கிற நடிகரை இந்த படத்தில நடிக்க வைங்கன்னுதான் இந்து சொன்னாங்க. சிவகார்த்திகேயன் வந்தார், அவரோட இருப்பு படத்தோட வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கு.தமிழ், தெலுங்குன்னு அத்தனை மொழிகளிலேயும் அச்சமில்லை பாடல் ஒலிக்குது. படத்துக்கு சில விமர்சனங்கள் வந்தது. அதற்கு விளக்கம் இங்கேயே கொடுக்கணும்னு நினைக்றேன். முகுந்தன் ஒரு தமிழர் என்ற அடையாளம் மட்டுமே இந்த படத்துக்கு இருக்க வேண்டும் என்பதுதான், அவரின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் எங்களிடம் வைத்த கோரிக்கை. அதே போல முகுந்த் ‘நைனா’ ‘நைனா’ என்று அழைக்கும் அவரின் தந்தை வரதராஜனும், ‘ஸ்வீட்டி’ என்று அழைக்கும் தாய் கீதாவும் எங்களிடம் வைத்த கோரிக்கை என்னவெனில்,முகுந்த் எப்போதும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுவார். தன்னுடைய சான்றிதழில் கூட எந்த குறியீடும் இருக்கக் கூடாது என்று நினைப்பார். எனவே ஒரு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஒரு ராணுவ வீரனாக இந்த படத்தில் அவருக்கு கொடுங்கள்’என்பதுதான். அந்த குடும்பத்தார் அனைவரும் எங்கள் முதல் சந்திப்பிலேயே இதை எங்களிடம் கேட்டுக் கொண்டனர்.அதே நேரம் ஒரு இயக்குநராக, இந்த பயணத்தில் அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ஒரு முக்கியமான விஷயமாக எங்கள் பார்வைக்குப் படவில்லை. அவர்கள் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது கூட, நாங்களும் அதை கேட்கவில்லை. அவர்களும் அதை சொல்லவில்லை”இவ்வாறு அவர் பேசினார்