ஆந்திர மாநிலம்,விசாகப்பட்டினம் போலீஸ்கமிஷனர் ஜெயப்பிரகாஷை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்துவிட, ஆந்திரா ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் போலீஸ்கமிஷனரை கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக தமிழ்நாட்டின் திறமையான போலீஸ் அதிகாரியான துரைசிங்கம் விசாகப்பட்டினம் வரவழைக்கப்படுகிறார். போலீஸ் கமிஷனர் கொலையில் பெரிய முக்கிய அரசியல் புள்ளியின் தொடர்பு இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதாவது, வெளிநாட்டிலிருக்கும் வெளிநாட்டு கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, ஒரு மர்ம கும்பல் அதை எரிக்கும்போது, காற்று மாசுபட்டு நிறைய குழந்தைகள் பலியாகி விடுகின்றனர். மேலும், அந்த கும்பல் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்வதையும் அறிகிறார். இந்த கும்பலை பிடிக்க முயற்சி எடுத்த கமிஷனர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டதும் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது தெரிய வருகிறது. அதன் பிறகு அங்கு துரைசிங்கம் தன அதிரடி பாணியில், நடத்தும் வேட்டையே ‘சி3’யின் பரபரப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.
முந்தைய ‘2’ பாகங்களைவிட மும்மடங்கு வேகத்துடன்….! படம் ஆரம்பித்த முதல் நொடியிலிருந்து கடைசி நொடி வரை வேகம்தான்.ஆனால் மொக்கையான நகைச்சுவை காட்சிகள்,படத்திற்கு ஸ்பீட் பிரேக்காக மாறியதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.சூரி தோன்றும் காட்சிகள் எரிச்சலடைய வைக்கின்றன. கடந்த இரண்டு பாகத்திலும் துரை சிங்கமாக சீறிப் பாய்ந்த சூர்யா, இந்த படத்திலும் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறார். ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் படத்தில், திருப்பு முனையை ஏற்படுத்துவது போல அமைக்கப்பட்டிருந்தாலும், இறுதியில் அவரும் சூர்யாவை காதலிப்பதாக சொல்வது அட போங்கப்பா…என்றே சொல்லத் தோன்றுகிறது.அனுஷ்கா வந்து போகிறார். இளம் வில்லனாக வரும் தாகூர் அனூப் சிங் தமிழுக்கு புதிது என்றாலும், தனது கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பால் கவர்கிறார்.இவர்களைத் தவிர இமான் அண்ணாச்சி, நிதின் சத்யா, சரத் பாபு, ஜோ மல்லூரி, ஜெயப்பிரகாஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் கச்சிதமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்.ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். பின்னனி இசை ஒரே இரைச்சல். பிரியனின் ஒளிப்பதிவு மிக அருமையாகவே விளையாடியிருக்கிறது. மொத்தத்தில் தறிகெட்டு ஓடும் சிங்கத்தின் வேகம் நமக்கு எரிச்சலையே தருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை!.