நடிகை நயன்தாரா தனது திரை வாழ்க்கை மற்றும் திருமணத்தை ஆவணப்படமாக எடுத்து அதை நெட்பிளிக்ஸில் வெளியிட்டு இருந்தார் .பியாண்டு தி ஃபேரிடேல் என்கிற பெயரில் உருவான இந்த ஆவணப்படம் வெளிவரும் முன்னர் அதன் டிரைலர் வெளியானது. அதில் நானும் ரெளடி தான் படத்தின் 3 விநாடி காட்சிகள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி அதை நீக்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பு நயனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
தங்களிடம் உரிய அனுமதி வாங்காமல் அந்த வீடியோ காட்சியை பயன்படுத்தி இருப்பதால் தனுஷ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதனால் கொந்தளித்த நயன்தாரா, நடிகர் தனுஷை தாக்கி மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டார். தன் ஆவணப்படத்தை புரமோட் செய்வதற்காக நயன்தாரா இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கடும் விமர்சனமும் எழுந்தது. தனுஷ் தரப்பு விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், வெளியான அந்த ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் 30 விநாடிகளுக்கு மேல் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து தங்களிடம் அனுமதி வாங்காமால் சம்பந்தப்பட்ட காட்சிகளை பயன்படுத்தி இருப்பதாகவும்,மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நெட்பிளிக்ஸ் நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சனை தமிழக அதிகார வரம்புக்குள் நடைபெற்றுள்ளது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே இந்த உரிமையியல் வழக்கை தொடரலாம் எனவும் நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.