சமீப காலங்களில் பெண்கள் சம்மந்தப்பட்ட எல்லா துறைகளிலும் கிராமம், நகரம் மற்றும் படித்தவர்கள், படிக்காதவர்கள் பேதமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடந்தேறி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது. இதுபற்றிய தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வெளிப்படுத்தி போராடி வருகின்றன. அதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர அரசுக்கும் காவல்துறைக்கும் அவர்கள் அழுத்தம் கொடுத்தும் வருகின்றன.
இந்நேரத்தில் அனைத்து திரைத்துறை கலைஞர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம்! உங்களுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்…… அவர்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி பல நலத்திட்டங்களை செய்தும் வருகிறீர்கள். அத்துடன் பெண்களுக்கு சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதையும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் முன்னுரிமை கொடுத்து சமூக செயலாற்ற உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!
சமீபத்தில் செல்வி.பாவனா அவர்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை ஒரு நடிகை என்று மட்டும் பார்க்காமல் பெண் இனத்திற்கான ஒரு கொடுமையாகவே கருதுகிறோம். இந்த நேரத்தில் எங்கள் உறுப்பினர் திரைக்கலைஞர் சகோதரி வரலட்சுமி அவர்கள் இதுபோன்று தனக்கேற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை மனகசப்புடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இதை சட்டப்படியும் தார்மீகரீதியாகவும் அவர்களுடன் இணைந்து குரல் கொடுக்க நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.
திரைத்துறையில் இயங்கி வரும் பெண்கள், நாடக துறையில் உள்ள பெண்கள், தொழில் பாதுகாப்பையும், உளவியல் ரீதியான பாதுகாப்பையும் காப்பாற்ற தனிப்பட்ட கவனம் செலுத்த தனிக்குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரை நியமிப்பதை குறித்து வருகின்ற செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.
இதுபோன்ற சமூக விழிப்புணர்வுகளுக்கு போராடும் ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்திற்கும் எப்போதுமே எங்களுடையஆதரவுகள் உண்டு. அவர்களுடன் சமூக மாற்றத்திற்கு இணைந்து செயல்பட நாங்கள் காத்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.