எல்லா படத்திற்குமே டைட்டில் போடும்போது தயாரிப்பாளர் கார்டு கடைசியில் வரும்.
காரணம், அந்த படத்துக்கு அவர்தான் எல்லாம்.. அவருடைய உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தில் தான் இந்தப் படம் உருவாகியது என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்காக!
மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அய்யா, இப்படி மிகப்பெரிய ஜாம்பவான்களை முதலாளி என்று அழைத்தவர்கள்தான் நடிகர்கள்..
அப்படிக் கோலோச்சிய தயாரிப்பாளர்களை பிச்சை எடுக்கும் ஜாதியாக, புரோட்டா விற்கும் கடைக்காரராக, ஆட்டோ ஓட்டுபவராக, இலவசப் பணத்திற்காக சங்க வாசலில் நிற்பவர்களாகச் சொல்லிக் கேவலப்படுத்தியிருக்கிறார் நடிகர் சங்கச் செயலாளர் விஷால்.
இதுவரை எத்தனையோ தயாரிப்பாளர்கள் ரோட்டுக்கு வரக் காரணமாக இருந்திருக்கிறார் விஷால்..
அப்படிப்பட்ட விஷாலின் பேச்சு தயாரிப்பாளர்களைத் தரம் தாழ்த்துவதாகவும், மன உழைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் அமைந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
மானமுள்ள, உணர்வுள்ள தயாரிப்பாளர்கள் இதை கண்டிக்காவிட்டால் நம்மீது நாமே எச்சிலைக் காரி உமிழ்ந்துகொள்வதைப் போல ஆகிவிடும்…
கவனமாக தவிர்க்க வேண்டிய ஒருவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறோம் நாம்.
விஷாலின் இந்த போக்கை தடுக்க உடனடியாகத் திரள வேண்டும்.
அவரது அவமானகரமான தரக்குறைவான பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த நாளை காலை 10 மணிக்கு நடிகர் சங்கத்தில் கூடுவோம்.. நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு தயாரிப்பாளர்களின் தன்மானம் என்னவெனக் காட்டுவோம்…
உணர்வுள்ள அனைத்துத் தயாரிப்பாளர்களும் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஆர். இராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன்,
கே. ராஜன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், ஜே.கே.ரித்தீஷ், சேரன், சுரேஷ் காமாட்சி, விஜயமுரளி, கோவைத்தம்பி, அழகன் தமிழ்மணி, சௌந்தர்,
V. ஞானவேல் மற்றும் உணர்வுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்.