தமிழில் 1993-ல் பிரபு நடிப்பில் வெளியான `தர்மசீலன்’ மற்றும் 1998-ல் நடிகர் கார்த்திக்-மீனாவை வைத்து `அரிச்சந்திரா’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செய்யாறு ரவி இன்று பகல் 12 மணியளவில் திடீர் மாரடைப்பால் காலமானார். செய்யாரை சேர்ந்த இவர், சென்னையில் அசோக் நகர் பகுதியில்குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு மகன்,மற்றும் மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக இருதய நோயால் பாதிக்கப்பட்திருந்ததாக கூறப்படுகிறது.இவர், `கோபுரம்’, `பணம்’, `ஆனந்தம்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். `த்ரிஷ்யம்’ படத்தையும் சிங்கள மொழியில் `தர்மயுத்தயா’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். இன்று காலை `அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’ என்ற தொலைக்காட்சி தொடரை இயக்கி கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னையில் உள்ள அசோக் நகரில் உள்ள வீட்டுக்குஎடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான செய்யாறுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நாளை உடல் தகனம் செய்யப்படுகிறது