தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தில் போட்டியிடும் கே.ஆர், ராதாகிருஷ்ணன்,விஷால் உள்ளிட்ட அணியினர் மும்முரமாக வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். கூடவே சர்ச்சைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் விஷால் சில இடங்களில் தற்போதைய தயாரிப்பாளர்களின் நிலை பற்றி பேசிய பேச்சுக்களுக்கு எதிர் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், விஷாலின் தேர்தல் கால பேச்சுக்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இயக்குநர் சேரன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது,
‘என்ன ஆச்சு விஷால் உங்களுக்கு, நல்லாத்தான இருந்தீங்க…? என்ன பேசுறோம், என்ன செய்றோம்னு தெரியாத அளவுக்கு ஆகிப் போனீங்களே ஏன்..?ஒரே ஒரு பதவிதான்… நடிகர் சங்க பொதுச்செயலாளர்…வெறும் மூவாயிரம் உறுப்பினர்களுக்குள்ள நடந்த தேர்தல்ல ஜெயித்தவர் நீங்க. அதுவும்ஜே.கே.ரித்தீஸ் உங்களை ஜெயிக்க வைக்க என்னவெல்லாம் செய்தார்? உங்களுக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் எப்படி கிடைத்ததுனு இப்ப ரித்தீஷை பேச சொல்லலாமா..?அந்த பதவிக்கு வந்தது தவிர நீங்கள் சாதித்தது என்ன…?நீங்க நடிச்ச படங்கள்லகூட ஒரே ஒரு படம், இந்த உலகத்துக்கும் மக்களுக்கும் பயன்படுற மாதிரி சிறப்பான படத்துல நடிச்சேன்னு சொல்ல முடியுமா…? மக்களின் மூளையை மழுங்கடிக்கிற, இன்னும் ஆதிகால சினிமாபோல இறங்கி டப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்குற படங்கள் பண்ற உங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது..?
இதை புகழ் போதைன்னுகூட சொல்ல முடியாது. ஒரு வகையான வியாதி. ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது உங்களுக்கு நல்லது…இப்போ தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல போட்டியிடுறீங்க… அதுவும் தலைவர்னு சொல்றீங்க… ஏன் உங்களுக்கு இவ்வளவு பதவி ஆசை…? நாம ஏற்கனவே நடிகர் சங்கத்துல பொதுச் செயலாளரா இருக்கோம்.. அதுலயே இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. சொன்ன வாக்குறுதிகளில் 80 சதவீதம்கூட இன்னும் செய்து முடிக்கல… அதுக்குள்ள தயாரிப்பாளர் சங்கத்துலேயும் மாற்றம் வேணும்னு நினைச்சா..?ஒரு நல்ல தயாரிப்பாளரை முன்னிருத்தி அவருக்கு ஆதரவு கொடுத்து மாற்றத்தை உருவாக்கலாம்… அதுதானே மாற்றத்தை விரும்புவதற்கு அழகு.. ஏன் அப்படி உங்களுக்கு செய்யத் தோணலை..?. ஏன்னா பதவி வெறி. எல்லாத்துலயும் தானே தலைவரா இருக்கணும். தான் ஒருத்தர்தான் எல்லாத்தையும் செய்ய முடியும்னு நினைக்கிறது பூனைக்கு கண்ண கட்டுன கதையா தெரியலையா..? இது உங்களோட அறிவின்மையைத்தான் காட்டுது.எத்தனையோ நடிகர்கள் படம் தயாரிச்ச அனுபவங்களோட உங்க சங்கத்துலயே இருக்காங்களே…!? அவங்கள நிறுத்தி ஆதரவு கொடுத்து, ஜெயிக்க வச்சு சங்கத்துல மாற்றத்த கொண்டு வர நினைச்சிருக்கலாமே.? அதவிட்டுட்டு அங்கயும் நான்தான்; இங்கயும் நான்தான்… எங்கயும் நான்தான்னா நல்லாவா இருக்கு…?நடிகர் சங்கத்துலயே நீங்க சொன்ன எல்லாத்தையும் செய்துட்டீங்களா..?
பொங்கலுக்கு இனிப்பு, காரம், துணி, அப்புறம் வெப்சைட்டில் மாற்றம்.. இது தவிர என்ன நீங்க சொன்னத செஞ்சீங்கன்னு சொல்ல முடியுமா..?
நடிகர் சங்க கட்டிடம் கட்ட இன்னும் ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கல… ஏற்கனவே இருந்த பிளானையே ஆரம்பிச்சிருந்தாகூட இந்நேரம் பாதி வேலைகள் முடிஞ்சிருக்கும்.. இந்த இயலாமைக்கு காரணம் என்ன்ன்னு தெரியுமா..? உங்களோட அதிகபிரசங்கித்தனமான பேச்சுதான். இது அரசியல் சார்ந்த உலகம்… உங்களோட பேச்சும், செயலும் ஏற்படுத்துற வெறுப்பு அந்த சங்கத்தையே பாதிக்குதுங்கிற உண்மைய நீங்க உணரணும் விஷால்.இப்படி நடிகர் சங்கத்துல இருக்குற வேலைகளயே செய்து முடிக்க முடியாத நீங்க எதற்காக தயாரிப்பாளர் சங்கத்துலயும் நான்தான் வரணும்னு நினைக்கிறீங்கனு தெரியல… அந்த சங்கத்த பற்றியும், அதில் உள்ள இடர்ப்பாடுகளை பற்றியும், அதை களைய தேவைப்படும் உழைப்பு பற்றியும், அதற்கு எடுக்கும் நாட்கள் பற்றியும் எவ்விதமான முன் யோசனையும் உங்களுக்கு இல்லைங்கிறததான் உங்களோட நடவடிக்கையும், வீம்பும் உணர்த்துது.கேட்டால்… இலவசங்களை அறிவித்து, பணத்தை காட்டி ஓட்டை வாங்கிரலாம்னு ஒரு தப்பு கணக்கு போடுறீங்க…அதுக்குள்ள வாக்காளர்களுக்கு இலவச நிலம்ன்னு அறிக்கை… இது எப்படி சாத்தியம்..? அதுவும் எந்த இடத்துல… எந்த ஊர்ல…? இதுக்கான பணம் தயாரிப்பாளார் சங்கத்துல எங்க இருக்கு..? அந்த நிதி வருவதற்கு என்ன சாத்தியம்…? அதை நடைமுறைப்படுத்துவது எப்படினு சொல்லுங்க..?
இது எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லி திட்டங்களை சொல்லணும்.
தம்பி… இங்க இருக்குறவங்க… தமிழக வாக்காளர்கள் இல்லை… உங்க பணத்த வாங்கிக்கிட்டு ஓட்டு போட்ட நாடக நடிகர்கள், ஜூனியர் ஆர்டிஸ்டுகள் இல்லை. அத்தனை பேரும் தயாரிப்பாளர்கள்… குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து படம் எடுத்துட்டு தன்னை கோடீஸ்வரர்களாக அடையாளப்படுத்திட்டு உட்கார்ந்திருப்பவர்கள்.
அவர்களுக்கு தேவை நலத்திட்டங்கள் இல்லை… நல்ல தொழில்… எல்லோருக்கும் தொழில்… அது சிறப்பாக நடப்பதற்கான திட்டங்கள்… அதை சொல்லாம எல்லோருக்கும் நிலம் இலவசம்னா… எவ்வளவு பிச்சைக்காரர்களாக நினைச்சிருக்கீங்க தயாரிப்பாளர்களை…?
நிலத்த வாங்கி குடுத்துட்டா, வீட்டை யாரு கட்டிக் குடுப்பா? வீட்ட கட்டி குடுத்துட்டா.. குடும்பம் நடத்த, செலவுகளை பார்த்துக் கொள்ள என்ன செய்வாங்க..?
இங்க இந்த பதவிக்கு வருவதற்கு முன்னாலயே நிலம் இலவசம்னு சொல்ற நீங்க, ஏற்கனவே ஒன்றரை வருடங்கள் நடிகர் சங்க பொதுச் செயலாளரா இருந்துக்கிட்டு நடிகர் சங்கத்துல வீடு இல்லாம எத்தனையோ நாடக நடிகர்கள் இருக்காங்களே, அவங்களுக்கு அரை கிரவுண்டு நிலமாவது இலவசமா கொடுத்திருக்கலாமே… ஆனா நீங்க என்ன செய்தீங்க..?
உங்களை நம்பி ஓட்டுப் போட்ட 300 நாடக நடிகர்களை எவ்விதமான இரக்கமும் இல்லாம யூனியனை விட்டு தூக்கி எறிஞ்சீங்களே.. அதற்கான காரணம் என்ன..? என்ன காரணமா இருந்தாலும் வேலை வாய்ப்பு இல்லாம, குடும்பம் நடத்த முடியாம, நடுத்தெருவுல நிக்கிற அவங்க என்ன செய்வாங்கனு யோசிச்சீங்களா..?
சரி… சிறு படத் தயாரிப்பாளர்களின் ஓட்டு வேணும்னு இப்படி நினைக்கிற நீங்க இதுவரைக்கும் எத்தனை சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு படம் எடுக்க தேதி கொடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா…?
இல்ல உங்கள வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்ப எந்த நிலையில இருக்காங்கனு தெரியுமா? உங்க படத்தோடஒப்பனிங் ஷோவில உங்களுக்கு கை தட்டக் கூட ஆள் இல்ல, ஆனா நீங்க வாங்குற சம்பளம் எவ்வளவு..? எவ்வளவு பேசுறீங்க…? அதை நியாயமா வாங்கிருந்தா உங்கள வச்சு படம் பண்ணின தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாம எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க…?
உங்கள அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நீங்க செய்தது என்ன..?அட்லீஸ்ட் இப்ப அவரு என்ன செய்றாருன்னு நினைத்ததுண்டா..? அவருக்கு நீங்க செட்டில் பண்றதா சொன்ன 45 லட்சம் என்ன ஆச்சு? அதுக்கு அப்புறம் எத்தனையோ கோடிகள் சம்பாதிச்சும் உங்களுக்கு அந்த பணத்த கொடுக்குற மனசு ஏன் வரல? அவரு இப்போ மிக மிக நெருக்கடியிலதான் இருக்காரு… அந்த தயாரிப்பாளரைப் பற்றி உங்களுக்கு கவலையோ அக்கறையோ இல்ல… அந்த சிறு நன்றியக்கூட நினைக்காத நீங்க எப்படி சிறு படத்தயாரிப்பாளர்களின் பிரச்சனைகள் பற்றி பேசுறீங்க..?
அப்புறம்… ‘கமல் சாருக்கு ஒண்ணுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்’னு பேட்டி வேற… என்ன திமிர் உங்களுக்கு! என்ன ஆணவம்.!? கமல் சாருக்கு நீங்க யாருங்க..? அவருக்கு ஒண்ணுன்னா இந்த உலகம் முழுவதும் கோடான கோடி ரசிகர்கள் இருக்காங்க அத பாத்துக்க… அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை… அவரை நீங்ககூட நின்னு காப்பாத்துற அளவுக்கு அவர் புகழும், தகுதியும் குறைந்தது இல்லை… பித்து தலைக்கேறிய பேச்சு அது…
‘விஸ்வரூபம்’ திரைப்படப் பிரச்சனை அப்போ நீங்கல்லாம் எங்க இருந்தீங்க? அப்போது நீங்கள் கமல் ரசிகர் இல்லையா? இல்ல அப்போ உங்களுக்கு அரசியலுக்கு வரணும்னு ஐடியா இல்லையா?
அப்புறம்… நான் ஏதோ கஷ்டப்படுறேன்.. படம் எதுவும் இல்லை, மாசம் 5000 ரூபாய் எனக்கு தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கணும்னு சொல்றீங்க… உங்க படத்துல நீங்க பண்ற காமெடியவிட இதுக்குதான் ரொம்ப சிரிப்பு வருது…
பொருளாதார ரீதியா எனக்கு கஷ்டம்தான். நான் இல்லைன்னு சொல்லல… ஆனா அது என் வாழ்க்கை… அதுல தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு விஷால்..? “நான்” “நான்” என்று பேசல… ஆனா சொல்ல வேண்டிய நிலை…
என்னோட படங்களுக்கு முன்னால உங்க படங்கள் ஒப்பீடு செய்யவே தகுதி இல்லாதவைனு என்னால திமிரா சொல்ல முடியும்… இந்த சமூகமும், தமிழ் மக்களும் எனக்கு அந்த அங்கீகாரத்தை கொடுத்திருக்காங்க… நான் கஷ்டப்படுறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா.. இல்ல.. வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டேனா…?
எனக்கு 5000 கொடுத்தா என் பிரச்சனை தீர்ந்திடும்னா, உங்களுக்கும் இனிமேல் மாசம் 5000 சம்பாதிச்சா போதும்ல… ஒரு படத்துக்கு 6 மாசம் நீங்க உழைக்கிறீங்கனு வைங்க, அப்போ இனிமேல் 30000தான் உங்களுக்கு சம்பளம்… அத வாங்கிக்கிட்டு நீங்க நடிக்கணும்.. தயாரா..?
யார்கிட்ட வந்து மோதுறீங்கனு தெரிஞ்சு மோதுங்க… நான் படம் பண்றதும், பண்ணாததும் நான் தீர்மானிக்க வேண்டியது… ஒரு வேலைய தொடங்கிட்டு அப்படியே அதை பாதியில் போட்டுட்டு வேற வேலய பாக்குற பழக்கம் எனக்கு இல்லை….
‘சி2ஹெச்’ -ன்னு ஒரு திட்டம் ஆரம்பிச்சப்போ என்னை மட்டுமே நம்பி 3000 பேர் பணம் முதலீடு பண்ணாங்க. அவங்ககிட்ட நான் பணம் வாங்கிருக்கேன். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க வழிவகை செய்யாம நான் படம் எடுக்கப் போனா அது பொறுப்பற்ற தன்மைனு இப்பவரைக்கும் போராடிக்கிட்டிருக்கேன்.
படம் பண்றதுக்கு ஒரு மனநிலை வேணும்… ஏன் பைரசியை ஒழிப்பேன்னு போராடுன நீங்க அன்னைக்கி எங்க போனீங்க?. உங்க போர்க் குரல் அன்னைக்கி முழங்கிருந்தா அந்த திட்டம் ஜெயிச்சிருக்கும்.. திரையுலகமும் நல்லா மாறியிருக்கும்… ரிலீஸ் பண்ண முடியாத படங்கள் எல்லாம் எப்பவோ ரிலீஸ் ஆகியிருக்கும், உங்க MGR படமும் சேர்த்து… நாமதான் ஒண்ணா சேரக் கூடாது, சேரனுக்கு அந்த நல்ல பெயர் சேந்துரக் கூடாதுனு கங்கணம் கட்டிக்கிட்டு அமைதியா இருந்தோமே…?!
உங்களிடம் இருக்கும் அத்தனையும் முழுக்க, முழுக்க சுயநலம் விஷால்… தன்னை மட்டுமே அனைத்திலும் முன்னிறுத்திக் கொள்ள வேண்டும். தான் மட்டுமே அந்த புகழையும் பேரையும் அடையணும்ங்கிற சுயநலம்.. அது ரொம்ப ஆபத்து… உங்களுக்கும் உங்களை சார்ந்த தொழிலுக்கும்…
ஒரு விஷயம் தெரியுமா…? இப்ப நான் படம் பண்ண போறேன்… என்னோட நெருக்கடி தெரிந்தும், பொருளாதார சூழல் தெரிந்தும் ‘நீங்க நல்லா வரணும் சார்… நீங்க கதை சொல்லுங்க சார், நான் நடிக்கிறேன்’னு ஒருத்தர் வந்தாரு பாருங்க… கதையை கேட்டுட்டு, ‘நான் தேதி தரேன் சார்… நாம பண்ணலாம் சார்’ அப்டின்னு ஒரு நடிகர் சொன்னாரு பாத்தீங்களா…? அதுதான் மனிதாபிமானம்… உதவி, மாற்று வழி… அந்த மனிதன்தான் விஜய் சேதுபதி… அவர்தான் சரியான மனுஷன்…
ஒரு மனுஷனோட பிரச்சனைக்கு உண்மையான தீர்வு என்னனு பாக்குற மனிதத் தன்மை.. அவருக்கு நான் தலை வணங்கலாம் எத்தனை முறை வேணும்னாலும்… தேதி கொடுத்ததுக்கு அல்ல… பிறர் துன்பம் புரிந்து அதை துடைக்க வந்த நல்ல மனசுக்கு…
வருது சார் என்னோட படம்…. திரும்ப எங்க வேலைய பாக்க போறோம்… அதுனால நீங்க என்னைப் பற்றி இனிமே கவலைப்பட வேண்டாம்… ஒரே ஒரு வார்த்த போதும், ஒருத்தர காயப்படுத்த, வாழ்க்கைய மாற்ற…
தயாரிப்பாளர்களைப் பற்றி பேசுறீங்க… சில பேர் இன்னைக்கு ஆட்டோ ஓட்டுறாங்க, பரோட்டா கடை வச்சிருக்காங்கனு.. அவங்க அதை வருத்தப்பட்டுட்டே செய்யல… உழைப்பை மட்டுமே நம்பி வேலை செய்றாங்க. உங்ககிட்ட வந்து நின்னு கையேந்தல…
என்னை விடுங்க.. ஏன்னா..?
“ கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் – அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்..
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா…
இதை உணர்ந்து கொண்டேன்…
துன்பம் எல்லாம் விலகும் கண்ணா… ”
இது கண்ணதாசன் வரிகள்…
அந்த மற்ற வேலை செய்ற தயாரிப்பாளர்களைப் பற்றி பேசாதீங்கன்னு சொல்றேன்…
உங்க நேர்காணல பாத்துட்டு அவர்களோட குடும்பமும், சுற்றத்தாரும் அந்த தயாரிப்பாளர்களை பார்க்கப்போகும் பார்வை அவர்களை எவ்வளவு வலிகளுக்கு ஆட்படுத்தும்னு நீங்க ஒரு கணம்கூட உணரவில்லை…
கடைசியாக ஒன்று…
தொழிற் சங்க விதிகளும், முதலீட்டாளர்கள் அமைப்பின் விதிகளும் தெரியுமா உங்களுக்கு..? ஒரு நிறுவனத்தின் முதலாளி ஏன் தொழிற் சங்கத்தில் தலைவனாக எப்போதும் இருப்பதில்லை… அப்படி முதலாளிகளே தொழில் சங்கத்தின் தலைவர்களாக இருக்க முடியும்னா… உலகத்துல இருக்குற எல்லா பெரிய நிறுவனங்களோட தொழிற்சங்க அமைப்பின் முதலாளிகளும் அவங்க தொழிற் சங்கங்களுக்கு தலைவர்களாகத்தான் இருப்பாங்க… இந்த இரண்டு சாதியுமே வேற வேற…
சரி விடுங்க… அது உங்களுக்கு புரியாது… சொன்னா புரிஞ்சுக்குற இடத்துலயும் நீங்க இல்ல… இன்னும் என்னென்ன கன்றாவி காட்சிகளை தமிழர்களா பொறந்த பாவத்துக்கு நாங்க பாத்து தொலைக்கணுமோ பாக்குறோம்…!!!
நன்றி உங்கள் கருணைக்கு…இவ்வாறு அவர் கூறியுள்ளார்.