தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் உள்ள புலியாட்டம் ஆடும் குடும்பத்தைச் சேர்ந்த(ராஜகுமாரன்) புலிப்பாண்டி, புலிவேஷம் கட்டி ஆடுவதில் ஜித்தன்.ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியிடம் ( இயக்குனர் வெங்கடேஷ்) சமையல்காரனாக வேலைபார்க்கிறான். சென்னையிலிருந்து பணி மாற்றலாகிச் தரங்கப்பாடிக்கு செல்லும் இன்ஸ்பெக்டர், கூடவே புலிப்பாண்டியையும் அழைத்துச் செல்கிறார்.. அதே ஊரில் முக்கியஸ்தராக இருக்கும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு வர ஆசைப்படும் பாக்ஸர் நம்பி (பரத்), ஆளும்கட்சி மந்திரி ஒருவரை தனது ஊரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைக்கிறார்.அதில் பள்ளிக்குழந்தைகள் கலைநிகழ்ச்சி நடத்துகின்றனர்.அவ்விழாவிற்கு வரும் மந்திரியின் காமக்கண்கள் ஒரு பள்ளிச்சிறுமியின் மீது பாய, தனது அரசியல் வளர்ச்சிக்காக பரத் இதை கண்டும் காணாமல் இருக்க,அதிர்ச்சியடையும் அச் சிறுமி தற்கொலை செய்து உயிரை விடுகிறாள். இவ்விசயம் புலிப்பாண்டி மூலமாக இன்ஸ்பெக்டருக்கு தெரிய வர, தட்டிக்கேட்ட இன்ஸ்பெக்டரை நம்பி மிரட்டி, தன் செல்வாக்கால் வேறு ஊருக்கு தூக்கியடிக்கிறார்.இதையடுத்து புலிப்பாண்டி, டீச்சர் ராதிகா பிரசித்தா மற்றும் நண்பன் பரத்சீனி இருவரின் உதவியுடன் சிறுமியின் சாவுக்கு காரணமான நம்பியையும் அமைச்சரையும் பழி வாங்கத் துடிக்கிறான் புலிவேஷம் மட்டுமே போடும் புலிப்பாண்டியால் அவர்களை பழி வாங்க முடிந்ததா இல்லையா? என்பது தான் மீதிக்கதை.
ராஜகுமாரன் கதாபாத்திரத்தை உணர்ந்து தன் பங்களிப்பை மிகச்சரியாக செய்திருக்கிறார். புலி வேஷம் போட்டு ஆடும் காட்சியிலும், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் அவரது கடின உழைப்பு தெரிகிறது. இருந்தாலும் படம் முழுவதும் அவரது வசன உச்சரிப்பு ஏமாற்றத்தையே தருகிறது.பேஸ் புக் தெரிந்தவருக்கு வை-பை பற்றி தெரியாமல் போவது ஆச்சரியம் தான்! ஒரு நல்ல கருத்து, நல்ல வசனங்கள், ஒரு சில நல்ல காட்சிகள் மட்டுமே ஒரு படத்தைக் காப்பாற்றிவிடாது என்பது இயக்குனருக்கு தெரியாமல் போனது ஏனோ? படத்தில் இடம் பெறும் பெரும் பாலான காட்சிகளில் ஆங்காங்கே விழும் தொய்வுகள் நமக்கு பெரும் சோர்வையே தருகிறது.
பரத், தேர்ந்த நடிப்பால் நம்மை வசீகரிக்கிறார். தெரிந்தே ஒரு குற்றத்துக்கு துணை போனதால் ஏற்படும் குற்ற உணர்ச்சியை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ராதிகா பிரசித்தா தன் கேரக்டர் உணர்ந்து கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.விஜய் மில்டனின் ஒளிப்பதிவு சூப்பர்.அனூப் செலினின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.மொத்தத்தில் ஜவ்வு போல் இழுக்கும் திரைக்கதையால் புலிபாண்டியின் ஆட்டத்தை ரசிக்க முடியாமல் போகிறது என்பதே உண்மை.
Rating-2/5.