தஞ்சாவூரில் நடந்து வரும் “தாரை தப்பட்டை’ படப்பிடிப்புத் தளத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இன்று காலை திடீர் விசிட் செய்தார்.. கரகாட்ட கலைஞர்களின் வாழ்வியலை மையப்படுத்தி இயக்குநர் பாலா இயக்கும் இப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் கரந்தை வடவாற்றுப் பாலப் பகுதியில் கடந்த ஒரு மாதமாகநடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை அங்கு சென்ற இசை ஞானி இளையராஜா, படப்பிடிப்பின் சில காட்சிகளை பார்த்தார்..அப்போது பத்திரிகையாளர்களிடம் இளையராஜா கூறுகையில், “இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டதன்பேரில் போகும் வழியில் இந்தப் படப்பிடிப்பைப் பார்க்க வந்தேன். பாலாவுக்கு மற்ற எல்லா படங்களையும்விட இது சவாலான படம். இதை அவர் சிரத்தையோடு உருவாக்கி வருகிறார்,” என்றார் இளையராஜா.பின்னர் அங்கு நடைபெற்ற தப்பாட்டக் கலைஞர்களின் ஆட்டத்தை வெகுவாக ரசித்தார். அப்போது, இயக்குநர் பாலா, தவில் கலைஞர் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர். இப்படத்திற்காக இளையராஜா 12 பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.