கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன், சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய நினைவேந்தல் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர். அவரை சந்திரஹாசன் அண்ணன்தான் வழிநடத்துவார். பாலச்சந்தர், அனந்து, சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர், கமலின் உயிர்கள். அதில் மூன்று பேர் உயிருடன் இல்லை. இருப்பினும் அவர்களுடைய ஆன்மா கமலை வழிநடத்தும்’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ‘என் அண்ணன் சந்திரஹாசனின் அறிவுரை இல்லாமல் நான் நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. அவர்தான், என் வாழ்நாள்களில் எனக்கான வழிகாட்டியாக இருந்தார். அவர், எனக்கு மரியாதையாக நடந்துகொள்ளக் கற்றுக்கொடுத்தவர். அவர், ஒருவரையும் ஒருமையில் அழைக்க மாட்டார். அவர் இல்லையென்றாலும் அவருடைய குரல் எனக்குக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்தக் குரல் என்னை வழிநடத்தும்’ என்றார்.