ஏப்ரல் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டு இருந்தார் ரஜினி. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிலையில், இந்நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக ரஜினி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் அவர்கூறியிருப்பதாவது:”நான் உங்களை எல்லாம் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து, உரையாடி 10 ஆண்டுகளாகிவிட்டது. நீங்களும் என்னிடம் பார்க்க வேண்டும், புகைப்படம் எடுக்க வேண்டும் என தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தீர்கள். எனக்கு நேரமெல்லாம் சரியாக அமையவில்லை.
இப்போது நேரம் கிடைத்திருப்பதால் ஏப்ரல் 12-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரைக்கும் ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்க திட்டமிட்டு இருந்தோம்.ஒவ்வொரு நாளைக்கும் 4 – 5 மாவட்டங்களிலிருந்து, தோராயமாக ஒரு மாவட்டத்துக்கு 300 பேர் என திட்டமிட்டு இருந்தோம். ஒரு நாளைக்கு 1500 – 2000 பேர் அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து, விருந்து கொடுத்து அனுப்பலாம் என்னுடைய ஆசை, விருப்பமாக இருந்தது.
1500 – 2000 பேரை தனித்தனியாக புகைப்படம் எடுப்பது என்பது நடைமுறையில் மிகவும் கடினம். 8 பேரை ஒரு குரூப்பாக வைத்து புகைப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். அது அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு ஏமாற்றமாக உள்ளது. குரூப் புகைப்படத்தை எப்படி வீட்டில் மாட்டிக் கொள்வது, தனித்தனியாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அனைவருமே கோரிக்கை வைத்தார்கள்.
அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. தனித்தனியாக புகைப்படம் எடுப்பது கடினமாக இருப்பதினால், ஏப்ரல் 12 – 16 ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்வை ரத்து செய்கிறேன். வரும்காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அல்லது 2 மாவட்டமாக நாம் திட்டமிட்டு அவர்களை அழைத்து தனித்தனியாக புகைப்படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
விரைவில் அந்நிகழ்வு எப்போது என்பதை நேரம் வரும் போது சொல்கிறேன். அனைவரும் இதைப் புரிந்து கொள்வீர்கள், ஒத்துழைப்பீர்கள் என நினைக்கிறேன்” என்று தனது ‘வாய்சை’ பதிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.