ஒரு காலத்தில் பிரபல சினிமா ஸ்டன்ட் மாஸ்டராக, கட்டிளம் காளையாக வலம் வந்த பெரியவர் ராஜ்கிரண், தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங் மற்றும் பேரன், பேத்திகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். 60 வயதிலும் கம்பீரமாக வலம் வரும் அவர், அடிக்கடி தன் கண்முன்னே சமூகத்தில் நடக்கும்அநீதிகளை தட்டிக்கேட்கிறார். இதனால் போலீஸ் அடிக்கடி வீடு தேடி வரும் சூழ்நிலையும் உருவாகிறது. இது மகன் பிரசன்னாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஒரு பிரச்சனை காரணமாக, இவரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் செல்ல, இதில் வெறுப்படைந்த மகன் பிரசன்னா,அப்பாவை திட்டி விடுகிறார். தன்னை புரிந்து கொள்ளாமல்,மகன் திட்டிய சோகத்தை மறக்க தண்ணியடித்து விட்டு செம போதையுடன், வீட்டுக்கு வரும் ராஜ்கிரண், மகனை கண்டபடி திட்டி விடுகிறார். வீடே ரணகளமாகி விடுகிறது.காலையில் போதை தெளிந்து, ‘ஐயோ போதையில இவ்வளவு அசிங்கமா நடந்துகிட்டோமே ’ இனிமே எப்படி மகன் முகத்தில் விழிப்பது என மருகித்தவிக்கும் ராஜ்கிரண், ஒரு முடிவுடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். அதுவரை உள்ளுக்குள் பாசத்தை மறைத்துக்கொண்டு அப்பாவிடம் முறைப்பு காட்டி வந்த பிரசன்னா பதறிப்போய் அப்பா ராஜ்கிரனை தேடி அலைகிறார். ராஜ்கிரனோ, தன் முதல் காதலி பூந்தென்றலை (ரேவதி) முகநூல் உதவியுடன் கண்டுபிடித்து அவளைக் காண ஐதராபாத் செல்ல… அங்கே என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை!
நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களைத்தாண்டி தனுஷ் ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் ஜெயித்திருக்கிறார். பாராட்டுகள் தனுஷ்! படப்பிடிப்பில், ‘வணக்கம் மாஸ்டர்’ என தன் காலில் பவ்யமாக விழும் ஸ்டன்ட் நடிகர்களை நல்லாருப்பா, இதெல்லாம் வேணாம் எனக் கூறி விட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ‘கெத்’தாக உலா வருவதாகட்டும், பக்கத்து வீட்டு பையனுடன் அவனுக்கு இணையாக தன் பழைய காதல் கதைகளை அள்ளி விடுவதாகட்டும், மறைக்கமுடியாத காதலை மனம் முழுவதும் நிறைத்துக்கொண்டு ஏக்கத்துடன், ‘இன்னமும் நான் உன் மனசுல இருக்கேனா?’ என்று ரேவதிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காத்திருப்பதிலாகட்டும்,தவறுதலாக செய்யும் சின்ன,சின்ன தவறுகளுக்காக மகன், மருமகளிடம் அவமானப்பட்டு தவிப்பதிலாகட்டும், அதை மறப்பதற்காக தன் பேரக் குழந்தைகளோடு செல்லம் கொஞ்சுவதிலாகட்டும் நாங்கெல்லாம் அப்பவே அப்படி! இப்ப கேட்கவா வேணும்! என்றபடி தனக்கு கொடுக்கப்பட்ட ப.பாண்டி கேரக்டரை சும்மா ஊதி தள்ளியிருக்கிறார் ராஜ்கிரண். கச்சிதமான , இயல்பான நடிப்பில் தன்னை மிஞ்ச ஆளே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் ரேவதி. சாயாசிங் ,பிரசன்னா இருவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து செய்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் நிறைவைத் தந்திருக்கிறார்.ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பவர் பாண்டிக்கு பலம்! 3௦ ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைத்து ரிட்டயர்டு என்ற கொடிய நோயால் அக் குடும்பத்தாராலேயே புறக்கணிப்புக்கு ஆளான பல குடும்பத்தலைவர்கள் இப்படத்தை பார்த்தால், ஐயோ! இது என் கதையாக இருக்கிறதே எனக் கூறி தவிக்கப்போவது நிஜம்! தனுஷ் உழைப்பு வீண்போக வில்லை!