சக்தி வாசு ஓடும் ரயிலில் இருந்து மர்ம நபர் ஒருவரால் சக்தி வாசு (ரஹீம் பாய்) தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடக்கும் சக்தியை தற்கொலை என முடிவு கட்டி விடுகிறது போலீஸ்.ஆனால், இது கொலை தான் என்கிறார் ரஹீமின் காதலி சாரா. இது குறித்து போலீஸ் கமிஷனரை சந்தித்து முறையிடுகிறார். இதையடுத்து. அவ்வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படுகிறது. அது கொலையா தற்கொலையா என்று கண்டுபிடிக்கும் முயற்சியில்,இறங்குகிறார் சிபிசிஐடி அதிகாரி ராகவா லாரன்ஸ் (சிவலிங்கேஸ்வரன்). இந்த விசாரணையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க, ராகவாலாரன்சுக்கு ஒரு புறாவும், கொலை செய்யப்பட்டரஹீமின் ஆவியும் நேரடியாக வந்து உதவுகிறது. இதற்கு நடுவே ராகவாலாரன்சின் மனைவி (சத்யா) ரித்திகாவிற்கு பேய் பிடிக்கிறது, இந்நிலையில் ரஹீமைக் கொன்ற கொலையாளி யார் என்பதை ராகவா லாரன்ஸ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை!
இதுவும் வழக்கமான லாரன்ஸ் ஸ்டைல் பேய்ப்படம்தான் என்றாலும், கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டுமே என மெனக்கெட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் பி.வாசு. வழக்கம்போல் டான்ஸ் மூவ்மென்ட், அதிரடி ஆக்சன், ஸ்டைல், ‘எனர்ஜி’லெவல் என ஸ்கோர் செய்திருக்கிறார் லாரன்ஸ்.படத்தின் முதல் பாதி, விசாரணை என்ற பெயரில் சுவாரசியமில்லாக்காட்சிகளால் ஆங்காங்கே படம் தொய்வடைந்தாலும், முதல்பாதியை விட இரண்டாம்பாதி சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வந்துட்டேன்னு சொல்லு எப்படி திரும்பி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என இப்படத்தின் சொல்ல வைத்திருக்கிறார் வடிவேலு! தான் எப்படி திருடன் ஆனேன் என்பதை ஊர்வசியிடம் சொல்லிக்காட்டும் இடம் சிரிப்பு சரவெடி ரகம்!. ரஹீம் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார் சக்திவாசு!பேயாக மிரட்டும் இடத்திலும் கச்சிதம். சில காட்சிகளே என்றாலும் நம் நினைவில் தங்கி விடுகிறார். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கும் தமன் பாடல்களில் பழைய மெட்டுகளே நம் நினைவுக்கு வருகிறது.ஊர்வசி, ராதாரவி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ், மதுவந்தி அருண் என அனைவருமே தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ரித்திகாவின் நடையில் ஆம்பளைத்தனம் தெரிகிறது. பீடி குடித்துக் கொண்டே ராகவா லாரன்ஸை மிரட்டும் காட்சிகள், மற்றும் பேயாக மாறும் காட்சிகளிலும் ரித்திகாவின் நடிப்பு தெரிகிறது சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும் சிவலிங்காவை ரசிக்கலாம்!