‘கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் ‘தப்பு தண்டா. இயக்குநர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் ‘தப்பு தண்டா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் திருமதி அகிலா பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் சக்தி சிதம்பரம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (மாநகரம்), இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (8 தோட்டாக்கள்), நடிகர் உதய், இயக்குநர் – நடிகர் பிரவீன்காந்த் மற்றும் தப்பு தண்டா படத்தின் படக்குழுவினர்களாகிய தயாரிப்பாளர் – கதாநாயகன் சத்யா, இயக்குநர் ஸ்ரீகண்டன், கதாநாயகி சுவேதா கய், அஜய் கோஷ், இ ராமதாஸ், ஜான் விஜய், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஒளிப்பதிவாளர் ஏ வினோத் பாரதி, படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் வில்லன் நடிகர் அஜய் கோஷ், மேடையில் மண்டியிட்டு தமிழக ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
“தமிழ் படங்களும், தமிழ் ரசிகர்களும், தமிழ் ஊடகம், பத்திரிகை மற்றும் இணையத்தள நண்பர்களும், ஒரு தரமான அங்கீகாரத்தை எனக்கு பெற்று தந்திருக்கின்றனர். இந்த கௌரவமே ஒரு நடிகனுக்கு மிக பெரிய சொத்து. விசாரணை, தப்பு தண்டா ஆகிய படங்களில் உள்ள என்னுடைய கதாபாத்திரங்கள், மற்றும் இங்கு உள்ளோரின் நல்லாசியுடன் தமிழ் திரையுலகில் நானும் ஒரு முன்னணி வில்லனாக வருவேன் என்ற நம்பிக்கையை தருகிறது.” என்று கூறினார் அஜய் கோஷ்