ஒரு திரைப்படத்தை ரசிக்கும் பாமர ரசிகர்களின் ரசனை குறுகிய காலத்திற்குள் அடிக்கடி மாறுவதைப் போல், அவர்களின் மனதில் கனவுகன்னியாகப் போற்றி கொண்டாடும் நடிகைகளின் போட்டோக்களும் அடிக்கடி மாறிவிடும். ஆனால் சினிமாவை நேசிக்கும் கண்ணியமான ரசிகர்களின் மனதில் இன்றும் சிம்மாசனம் போட்டு பல நடிகைகள் அமர்ந்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒருவராக கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் நீடித்திருப்பவர் நடிகை சுஜா வரூணி.
இவரை அண்மையில் சந்தித்து உரையாடினோம்.
ஒரு படத்தில் நடிப்பதற்கு முன் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
எனக்கு வாய்ப்பளிப்பதற்காக என்னைத் தேடி வரும் இயக்குநரிடம் முதலில் நான் திறந்த மனதுடன், கதையை கேட்கிறேன். அவர்கள் சொல்லும் கதையும், அதில் எனக்கான கேரக்டரும் என்னை ஈர்த்தால் மட்டுமே அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். சின்ன கேரக்டராக இருந்தாலும் பவர்ஃபுல் கேரக்டராவோ அல்லது கதைக்கான கேரக்டராகவோ இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பேன். ஒரேயொரு காட்சியில் வந்தாலும் ‘நச்’சென்று ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். அதற்கு பின்னரே இயக்குநரைப் பற்றியும், தயாரிப்பு நிறுவனத்தைப் பற்றியும் தெரிந்துகொள்கிறேன். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை.
என்ன மாதிரியான கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
எல்லாவித கேரக்டர்களிலும் நடிக்கவேண்டும். ஹீரோயின் ஒரியண்டட் ஸ்கிரிப்டில் நடிக்கவும் ஆசையிருக்கிறது. அதிலும் ஹிந்தி நடிகை வித்யா பாலன், கங்கணா ராவத், ராதிகா ஆப்தே போல் கதையின் நாயகியாக நடிக்க விரும்புகிறேன். அதே போல் தங்களின் அற்புதமான திறமையால் தமிழ் ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தியிருக்கும் இயக்குநர்களான பாலா, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் இயக்கும் படங்களில் சப்போர்ட் கேரக்டர்களில் கூட நடிக்க ஆவலாக இருக்கிறேன். இவர்கள் வித்தியாசமான படைப்பாளிகள் மட்டுமல்ல, அதையும் கடந்து இவர்கள் தங்களின் சமூக பொறுப்புணர்வை உணர்ந்து படமெடுப்பவர்கள். இவர்களின் படங்கள் ரசிகர்களிடத்தில் பெரிய தாக்கத்தை எற்படுத்துவதை நான் அறிந்திருக்கிறேன். அதனால் அவர்களின் படத்தில் ஒரு சிறிய கேரக்டர்களில் நடிப்பதற்கு விரும்புகிறேன்.
கடைபிடிக்கும் கவர்ச்சி கொள்கை?
திரைக்கதையின் உணர்வோட்டத்திற்கேற்ப ஆடையில்லாமல் நடிப்பதற்கான துணிச்சலும் இருக்கிறது. கவர்ச்சிக்காகவே செயற்கையாக திணிக்கப்படும் காட்சிகளில் ஆபாசமான ஆடையணிந்து நடிக்கமாட்டேன் என்று சொல்லும் துணிவும் இருக்கிறது.
இடையில் ஏற்பட்ட தொய்வு குறித்து..?
2008 ஆம் ஆண்டிற்கு பிறகு எக்காரணம் கொண்டும் எந்த மொழியிலும் ஒரேயொரு பாடல் காட்சியில் தோன்றுவதில்லை என்று உறுதியான முடிவெடுத்தேன். இன்று வரை மட்டுமல்ல எதிர்காலத்திலும் இந்த முடிவில் நான் உறுதியாக இருப்பேன். என் மீது விழுந்த மாயத் தோற்றத்தை உடைக்க எனக்கு இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுப்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. இருந்தாலும் நம்பிக்கையுடன் காத்திருந்தேன். என்னுடைய தவம் வீண் போகவில்லை. அதன் பின்னர் என்னுடைய நிலைபாட்டை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் புரிந்துகொண்டனர். தற்போது சவாலான கேரக்டர்களில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே என்னை தேடி வருகிறது. அதனால் இடையில் தொய்வு ஏற்படவில்லை. என்னை நானே புதுபித்துக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட கேப் அது.
தற்போது..?
அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள் ’ என்ற படத்திலும், கதிர் நடிக்கும் ‘சத்ரு ’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். இதில் சத்ரு படத்தில் ஒரு கேங் ஸ்டாராக நடித்திருக்கிறேன். இதில் டயலாக் ஏதும் பேசாமல் வித்தியாசமான சேசிங்கில் நடித்திருக்கிறேன். சமுத்திரகனி நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். அடுத்த மாதம் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் ‘அட்சயன்ஸ்’ என்ற படத்தில் ‘பஞ்சமி’ என்ற தமிழ் பேசும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். வித்தியாசமான கேரக்டர்ஸ். வித்தியாசமான பர்ஃபாமென்ஸ்.
எதிர்கால இலக்கு..?
திரையுலகில் எனக்கான அங்கீகாரத்தை நோக்கி நம்பிக்கையுடன் பயணப்படுகிறேன். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதற்கான தகுதிப்படுத்திக் கொள்வதிலும், தயார் படுத்திக் கொள்வதிலும் தீவிரமான அக்கறையுடன் பணியாற்றி வருகிறேன். இருந்தாலும் இன்றைய சினிமா ரசிகர்கள் சரிதா, கீதா,ஸ்ரீப்ரியா, ரேவதி, சிம்ரன், குஷ்பு போன்ற நடிகைகளின் நடிப்பைப் பற்றி சிலாகித்து உதாரணம் கூறுவதைப் போல, பத்தாண்டுகளுக்கு பின் அக்கால ரசிகர்கள் முன்னூதாரணமான நடிகை என்று என்னை குறிப்பிட்டு பேசவேண்டும். அதுபோன்ற கேரக்டரில் நடித்து பெயர் வாங்கவேண்டும் என்பதை நோக்கியும் என்னுடைய பயணம் அமையும்.
திரைக்கதை ஆக்கத்தில் கேரக்டரைசேஸனுக்கான நடிகைகளின் பங்களிப்பு குறித்து..?
முதலில் ஆர்ட்டிஸ்ட்டிற்கு சின்சியாரிட்டி வேண்டும். இன்று முன்னணிக்கு முன்னேறியிருக்கும் நடிகைகளின் பின்னணியை ஆராய்ந்தால் அவர்கள் காட்டிய சின்சியாரிட்டி தான் முதன்மையாக இருக்கும். ‘கிடாரி’ வெளியான பின்பு தான் என்னையும் ஒரு திறமையான நடிகை என்று திரையுலகினர் அங்கீகரித்தார்கள்.
பலம் மற்றும் பலவீனம் குறித்து கண்ணாடி முன் நின்று யோசித்திருக்கிறீர்களா?
திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து என்பது எளிதாக கிடைக்கக்கூடியதல்ல. சிலருக்கு ஒரே நாளில் வரலாம். சிலருக்கு பல ஆண்டுகள் கழித்து வரலாம். நடிகைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் வயதாக வயதாகத்தான் அவர்களின் திறமை மேம்பட்டு, நுட்பமான உணர்வுகளை திரையில் பிரதிபலித்து நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத்தருகிறதோ.. என எண்ணத் தோன்றும்.
இன்றைய இளம் படைப்பாளிகள் குறித்து..?
ஆச்சரியப்படுகிறேன். வித்தியாசமாக சிந்திக்கும் அவர்களின் படைப்பாற்றலை மதிக்கிறேன். திறமையான கலைஞர்களின் குறும்படங்களில் நடிக்கவும் விருப்பமாக இருக்கிறேன். அதிலும் சர்வதேச விருதுகளை குறிவைத்து தயாராகும் படைப்பிற்கு முன்னுரிமைக் கொடுத்து பரிசீலிக்கவும் தயாராக இருக்கிறேன்.