சத்யராஜ் நடித்துள்ள ‘பாகுபலி 2’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என வட்டாள் நாகராஜ் உள்பட சில கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.இன்று அங்கு சத்யராஜின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. இதையடுத்து பாகுபலி 2 வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று மதியம் அவர் விடுத்துள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:”9 வருடங்களுக்கு முன்னால் காவிரி நதி நீர் பிரச்சினையின் போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ்ப் படங்கள் திரையிடுவதை நிறுத்தச் சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பலரும் ஆவேசமாகப் பேசினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.அதற்கு எதிர்வினையாக என்னுடைய கொடும்பாவி உருவ பொம்மைகள் கர்நாடகவில் எரிக்கப்பட்டன. அதே வேளையில் கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக திரைப்படக் கலைஞர்களும் ஆவேசமாகப் பேசினார்கள்.அப்படி நான் பேசிய போது நான் கூறிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே 35 ஆண்டுகளாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய்மொழி கன்னடம்.
கடந்த 9 வருடங்களில் ‘பாகுபலி 1’ உட்பட நான் நடித்த சுமார் 30 படங்கள் கர்நாடகாவில் வெளியாகி உள்ளன. எந்தப் பிரச்சினையும் எழவில்லை. சில கன்னடப் படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை.வருடங்களுக்கு முன்னால் நான் அந்தக் கண்டனக் கூட்டத்தில் பேசிய வீடியோ பதிவை யூடியூபில் பார்த்ததாலும், நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்கள் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும், அந்த வார்த்தைகளுக்கக 9 வருடங்களுக்குப் பிறகு கன்னட மக்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழ் ஈழ உறவுகளுக்கும், தமிழக மக்களுக்கும், என் நலன் விரும்புபவர்களுக்கும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். பாகுபலி என்ற பெரிய படத்தில் நடித்த மிகச் சிறிய தொழிலாளி நான். என் ஒருவரின் பேச்சின் பொருட்டு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பு விரயமாவதை நான் விரும்பவில்லை.
அதுமட்டுமல்லாது, கர்நாடகத்துக்கு ‘பாகுபலி 2’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும்.இனிவரும் காலங்களில் தமிழ் ஈழ மக்களின் பிரச்சினையாக இருந்தாலும், காவிரி நதி நீர் பிரச்சினையாக இருந்தாலும், விவசாயிகளின் பிரச்சினையாக இருந்தாலும் தமிழக மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாக கூறிக்கொள்கிறேன்.
இப்படி நான் கூறுவதால் சத்யராஜை வைத்துப் படமெடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து இந்த சாதாரண, சிறிய நடிகனை படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம். என்னால் நஷ்டமடைய வேண்டாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால், ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் பெருமை, மகிழ்ச்சி.என் மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு ‘பாகுபலி 2’ படத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று சத்யராஜ் கூறியுள்ளார்.