
தனுஷ், கிருத்தி சனோன், பிரகாஷ் ராஜ், பிரியன்ஷு பைன்யுலி, டோட்டா ராய் சவுத்ரி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ஹிமன்ஷு ஷர்மா, நீரஜ் யாதவ் இருவரும் எழுதியிருக்க, ஆனந்த் எல். ராய் இயக்கியிருக்கிறார். ‘டிசீரீஸ்’ மற்றும் ‘கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ஆனந்த் எல் ராய், ஹுமான் ஷூ சர்மா ஆகியோர் தயாரித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் (தனுஷ்) ஷங்கர், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கோபக்கார இளைஞர். எப்போதும் அடிதடி, வம்பு வழக்கு என தன்னுடைய இஷ்டம் போல் நடந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி (கிருத்தி சனோன்) முக்தி, (தனுஷ்) ஷங்கர் போன்ற இளைஞர்களை (taming) கட்டுக்குள் கொண்டு வரமுடியும். என நிரூபிக்கும் ஆய்வறிக்கையை சமர்பித்து, முனைவர் பட்டம் பெறுவதற்கு, (தனுஷ்) ஷங்கரையே பயண்படுத்த முடிவு செய்து அதில் வெற்றியும் பெறுகிறார். அந்த காலக்கட்டத்தில், ஷங்கர் முக்தி மேல் காதல் கொள்வதுடன், அவரை திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார். இதை மறுக்கும் முக்தி, வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். தன்னை ஏமாற்றிவிட்டதாக கோபம் கொள்ளும் ஷங்கர், முக்தியின் திருமணத்திற்கு முன்னதாக நடக்கும் மெஹெந்தி விழாவில், பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படத்தின் மீதிக் கதை.
ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார், தனுஷ். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதும், இந்திய விமானப்படையில் தன்னிகரில்லா விமானியாக பணிபுரியும் போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். ஏகப்பட்ட காட்சிகளில் கைதட்டல் பெறும் நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, நீண்ட வருடங்களுக்குப்பிறகு, லே-வில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் அவரும் கிருத்தி சனோனும் சந்திக்கும், குளோசப் காட்சியில் அவர் காட்டும் முகபாவனை அல்ட்டிமேட்! பல காட்சிகளில் ரஜினிகாந்தின் ஸ்டைல் வந்து போகிறது!
முக்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருத்தி சனோன், தனுஷூக்கு நான் இளைத்தவரல்ல. என்பதைப் போல் நடித்திருக்கிறார். அழகான தோற்றத்திலும், சிறப்பான உடல் மொழியாலும் ரசிகர்களை தன் பக்கம் எளிதில் ஈர்த்துவிடுகிறார். தனுஷ் ஒரு படத்தின் பாதியை நகர்த்தி செல்லும் வேலையில், படத்தின் மறு பாதியை இவர் நகர்த்திச்செல்கிறார். பல காட்சிகளில், ஆழ்ந்த நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
தனுஷின் தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், நண்பராக நடித்திருக்கும் பிரியன்ஷு பைன்யுலிவ், கிருத்தி சனோனின் தந்தையாக நடித்திருக்கும் டோட்டா ராய் சவுத்ரி ஆகியோரது நடிப்பும் திரைக்கதைக்கு பெரும் பலமாக இருக்கிறது.
படத்தின் மேக்கிங் எப்படி பிரம்மாண்டமாக இருக்கிறதோ, அதேபோல் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், உயிரோட்டமுள்ள அந்தந்த கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும் படத்திற்கு பிரம்மாண்டம் சேர்க்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும், டெலிவெரி காட்சி, பஸ் டிரைவரை தனுஷ் அடிக்கும் காட்சி, மத்திய அரசின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் கிருத்தி சனோனின் வீட்டுக்குள் தனுஷ் நடத்தும் தாக்குதல் காட்சிகள் படத்தின் பலவீனங்களாக இருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் துஷார் காந்தி ராயின் ஒளிப்பதிவும், ஏ. ஆர். ரகுமானின் இசையும் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், தனுஷின் பாலிவுட் இருப்பினை அழுத்தமாக பதிவு செய்கிறது.












