இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படத்துக்காக ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் காத்திருப்பது பாகுபலி 2. படத்துக்காகத்தான்
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு நாளை விடை கிடைத்துவிடும். ஆனால் அதற்குள் சில இணையதள கில்லாடி குரூப் ஓன்று பாகுபலி 2 படத்தின் கதை இதுதான் என ராஜமௌலிகே மயக்கத்தை வருமளவுக்கு ஒரு கதையை வெளியிட்டிருக்கிறது.இது உண்மையா?இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
மகிழ்மதி சாம்ராஜ்யத்தை பாகுபலி கைப்பற்றுவதோடு முதல் பாகம் முடிகிறது. அதன்பின் ஆரம்பிக்கும் கதை இதோ:’பாகுபலி அரசனாகிவிட்டாலும் என்றேனும் ஒருநாள் மகிழ்மதியை தான் ஆளுவேன் என்ற நம்பிக்கையில் தக்க சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறான் பல்லவ தேவன். கிடைக்கும் சந்தர்பங்களில் பாகுபலிக்கு எதிராக பல சூழ்ச்சிகளையும் செய்கிறான்.பாகுபலியின் ஆட்சியில் வரலாறு காணாத செழிப்புடனும் வளர்ச்சியுடனும் மகிழ்மதி நாடே மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. இதனால் சிவகாமிக்கும் எல்லையற்ற திருப்தி. இந்த சமயத்தில்தான் குந்தல தேசத்தை சேர்ந்த ராணி தேவசேனாவின் மீது காதல் வசப்படுகிறார் பாகுபலி.
பல்லவதேவனுக்கும் தேவசேனா மீது காதல். ஆனால் தேவசேனா பாகுபலியைத்தான் உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். ஆனால் இவர்கள் திருமண ஒப்பந்தத்துக்கு இரு நாடுகளும் சுமுகமான தீர்வுக்கு வரவில்லை. இதை பயன்படுத்திக் கொண்டு பாகுபலிக்கு எதிராக சிவகாமிக்கு கொம்பு சீவுகிறான் பல்லவதேவன்.
பல்லவதேவனின் சூழ்ச்சி வலையில் சிக்கிய சிவகாமி, தேவசேனாவை திருமணம் செய்துகொண்டால் நீ மகிழ்மதி தேசத்தை விட்டு ஒதுங்கி இருக்கவேண்டும் என பாகுபலிக்கு கட்டளையிடுகிறார். தன்னை நம்பி வந்த தேவசேனாவை கைவிட மனம் இல்லாத பாகுபலி, மகிழ்மதி தேசத்தை விட்டு வெளியேறுகிறார்.
தற்போது அரச பதவியை பல்லவதேவனுக்கு வழங்குகிறார் சிவகாமி. தன் கனவு நிறைவேறியதில் தலைகால் புரியாமல் ஆட்டம் போடுகிறார் பல்லவதேவன். ஆனால் பாகுபலி ஆட்சி இல்லாத ஊரில் எங்கும் நிம்மதி இல்லை. மக்கள் எல்லோரும் பாகுபலியே மீண்டும் ஆட்சி செய்யவேண்டும் என விரும்புகிறார்கள். பாகுபலிக்கு ஆதரவாக பேசுபவர்களை சித்தரவதை செய்து கொடுமைப்படுத்துகிறார் பல்லவதேவன். இது தெரிந்தும் வலியை உள்ளேயே வைத்துக்கொண்டு மவுனமாக இருக்கிறார் சிவகாமி.ஆனால் பல்லவதேவனின் ஆட்டம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. முதல் பாதியில் மகிழ்மதியிடம் தோற்ற காலகேயனின் சகோதரர் பாகுபலி இல்லாத இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகிழ்மதிக்கு எதிராக போர் தொடுக்க முயல்கிறான்.இதை அறிந்துக்கொள்ளும் பாகுபலி, மகிழ்மதி ராஜ்ஜியத்தை காப்பாற்ற மீண்டும் மகிழ்மதிக்கே வருகிறான். ஊர் மக்களும் போர் வீரர்களும் பழையபடி உற்சாக நிலைக்கு திரும்புகிறார்கள்.
பாகுபலி இருந்தால்தான் வெற்றிபெற முடியும் என்பதால் பல்லவதேவனும் இதற்கு சம்மதிக்கிறான்.அதேசமயம் தனது அடிமை கட்டப்பாவிடம் போரில் நாம் வெற்றிபெற்றதும் பாகுபலியை கொன்றுவிட வேண்டும் என்றும் கட்டளையிடுகிறான். அரசர் சொல்லை தட்டக்கூடாது என்பதால் கட்டப்பாவும் அவ்வாறே செய்கிறான். பின்னர் பாகுபலி மகனையும் கொல்ல ஆணையிட்டு தேவசேனாவை சிறைப்பிடிக்கிறான் பல்லவதேவன்.ஆனால் பல்லவதேவனின் சூழ்ச்சிகளை அறிந்துகொள்ளும் சிவகாமி, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக தன் உயிரை பணயம் வைத்து பாகுபலியின் மகனை காப்பாற்றி மகிழ்மதியை விட்டே வெளியேறுகிறாள். இதுதான் முதல் பகுதியின் தொடக்க காட்சி என்பது நினைவிருக்கலாம்.இந்த மொத்த கதையையும் கட்டப்பாவிடம் இருந்து கேட்டுக்கொள்ளும் ஷிவடு, பின்னர் கட்டப்பா, அவந்திகா, அஸ்லாம் கான் உதவியுடன் பல்லவதேவனை வீழ்த்தி மகிழ்மதி ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதே மீதிக்கதை.
இன்னொரு இணையதள குருப்போ, ‘கட்டப்பா பாகுபலியை கொலை செய்யவில்லை. மேலே சொன்ன மொத்த கதையும் ஓகே.. ஆனால் கட்டப்பா பாகுபலியை முதுகுக்கு பின்னால் குத்துகிறான். பின்னர் காயப்படும் பாகுபலியை பல்லவதேவன்தான் கொலை செய்கிறான் என்கிறார்கள். முதல் பகுதியில் பல்லவதேவனே பாகுபலியை தான் கொன்றுவிட்டதாக ஒரு காட்சியில் கூறுவதை இவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள்.
எது எப்படியோ! இதில் எந்தளவு உண்மை என்பது நாளை தெரிந்துவிடும்!