ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில் எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. ஏற்கனவே டி.இமான் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இது தான் கதையா? என்ற ரீதியில் ஒரு மெல்லிய கதையை சொல்லுவார் இயக்குனர் எழில். ஆனால் படமாக பார்க்கும் போது மிகவும் பிரமாதமான படமாக எடுத்து வைத்திருப்பார். அப்படி நான் நினைத்த நான்கு படங்களும் சூப்பர் ஹிட். அந்த மாதிரி இந்த படமும் பெரிய வெற்றி பெறும். என் கைபேசியை எடுத்து பார்த்தால் என் மனைவியை விட யுகபாரதியின் மொபைல் நம்பருக்கு தான் அதிகம் பேசியிருப்பேன். அவருடன் தான் அதிக பாடல்கள் பணியாற்றியுள்ளேன், அது ஒரு நல்ல அனுபவம் என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.
இமான் ஒரு உணவுப்பிரியர். கம்போஸிங்குக்கு முன்பு அவருக்கு பிரியாணி ரெடி பண்ணிருவேன். இமானும், யுகபாரதியும் சேர்ந்துட்டாலே தன்னால சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து விடும். நம் முன்னோடி இயக்குனர்கள் எல்லோரும் மிகவும் திறமையானவர்கள், புத்திசாலிகள், அவர்களுடம் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவம். இப்போது இருப்பவர்கள் சினிமா வரலாற்றை, நம் மூத்த இயக்குனர்களை பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். அது தவறு, மாற வேண்டும் என்றார் இயக்குனர் எழில்.
சிருஷ்டி என்ன சொன்னாலும் நம்புவார், கொச்சினை தாண்டி ஒரு கடற்கரையில் ஷூட்டிங் நடந்தபோது சிருஷ்டிக்கு கேரவன் கூட இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். எம்புட்டு இருக்குது ஆசை பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு அவ்ளோ பெரிய அளவு பேசப்படறதுக்கு முக்கிய காரணம் ரெஜினா தான். நான் மூணாவதா ஒப்பந்தமான படம் தான் சரவணன் இருக்க பயமேன். ஆனா முதல்ல ரிலீஸ் ஆகுது, அது தான் எழில் சாரின் வேகம். படம் பார்த்துட்டு நல்லா இருந்தா உடனே விமர்சனம் எழுதுங்க, இல்லைனா மூணு நாள் கழிச்சு எழுதுங்க என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.
விழாவில் நாயகிகள் ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, கவிஞர் யுகபாரதி, நடிகர்கள் ரோபோ சங்கர், கும்கி அஸ்வின், சுப்புராஜ், ராஜாசேகர், சாம்ஸ், நடிகைகள் ஜாங்கிரி மதுமிதா, ரிஷா ஆகியோரும் பேசினார்கள்.