சென்னை தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் உள்ள நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி பொது சாலைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில், அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் இருவரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.இந்நிலையில் இவ் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று என்.கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகிய நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்தனர்.மேலும் நீதிபதிகள், ”நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை வழக்கறிஞர் ஆணையர் கே.இளங்கோவன் ஆய்வு செய்ய வேண்டும். நடிகர் சங்கமும், மனுதாரரும் இணைந்து ஆணையருக்கு ரூ.1 லட்சம் ஊதியம் வழங்க வேண்டும் என்றும்,
வழக்கறிஞர் கே.இளங்கோவன் கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து மே 29-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆணையர் ஆய்வறிக்கை வழங்கும் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்றும் உத்தரவிட்டனர்.