தமிழ் சினிமாவிற்கு தரமான இயக்குநர்களையும், வெரைட்டியான சினிமாவையும் கொடுத்து இன்று வரை தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர் தயாரிப்பாளர் ஆ.ர்பி. சௌத்ரி. அவரது வாரிசு என்ற அடையாளத்துடன் திரையில் அறிமுகமானாலும், தன்னுடைய கடின உழைப்பால் இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருப்பவர் நடிகர் ஜீவா.
தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்காக ஆரோக்கியமான விவாதங்களையும், விசயங்களையும் தன்னுள் வைத்திருக்கும் இவரை ‘இணைய தலைமுறையின் இளைய கமல் ’ என்றே குறிப்பிடலாம். அவரை அண்மையில் சந்தித்து உரையாடினோம்.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ பற்றி..?
இயக்குநர் ஐக், இந்த கதையை என்னிடம் சொன்னபோதே எனக்கு பிடித்திருந்தது. அவர் கமல்ஹாசன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அதுமட்டுமல்ல என்னுடைய நண்பரும் கூட. நானும் பேமிலி எண்டர்டெயினர் ஸ்கிரிப்ட் ஒன்றில் நடிக்க விருப்பமாக இருந்தேன். இந்த கதை எனக்கு பொருத்தமாக இருந்தது. அதிலும் சூரியுடன் இணைந்து நடிக்கும் போது சிறப்பாக வந்தது. படத்தில் காமெடி காட்சிகள் நன்றாக வாய்விட்டு சிரிக்கும் படி இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த படம் பிடிக்கும். அதுவும் தற்போது ரசிகர்கள் பேயையும் பயத்தையும் ரசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த படத்தில் ஒரு சின்ன மெசேஜும் இருக்கிறது.
அது என்ன மெசேஜ்?
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பாள். அதே போல் ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னால் அவர்களின் குடும்பம் இருக்கிறது. ஒருவன் ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி பயணப்படும் போது எக்காரணம் கொண்டும் அவன் வெற்றியைக் கொண்டாட உடன் இருக்கபோகும் குடும்பத்தை விட்டுவிடக்கூடாது. ஏனெனில் வெற்றிகளை விட குடும்பம் என்பது முக்கியமானது என்பதை சுவராஸ்யமாக இதில் இயக்குநர் ஐக் சொல்லியிருக்கிறார்.

முதல் பகுதியில் நான் சூரி ஸ்ரீதிவ்யா தேவதர்ஷினி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருக்கிறோம். அதே போல இடைவேளைக்கு பின் தொடரும் இரண்டாம் பகுதியிலும் ஏராளமான புதிய புதிய கேரக்டர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு பிரேமிலும் கூட்டம் கூட்டமாக கேரக்டர்ஸ் இருக்கும். ஆனால் ஒரு இடத்தில் கூட போரடிக்காது. சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். படம் முடிந்து வெளியே வந்தபிறகும் கூட யோசித்து யோசித்து சிரித்துக் கொண்டிருப்பீர்கள். அந்த அளவிற்கு காமெடிக் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படத்தில் கதையின் நாயகன், எப்படி அவனுடைய குடும்ப உறுப்பினர்களுடன் பாசபிணைப்போடு இருக்கிறான் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஐக்.
இயக்குநர் ஐக்கைப் பற்றி..?
நடிகவேள் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஒரு படைப்பாளியின் முதல் படத்தில் நான் நடித்தேன் என்பதே எனக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன்.

இண்டர்நெட் ஹாக்கிங்கைப் பற்றி பேகவிருக்கும் ‘ கீ ’ என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். அடுத்த படத்தைப் பற்றி இப்போது யோசிக்கவில்லை. நிறைய கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த கதையும் களமும் கிடைத்தவுடன் நடிக்க ஒப்புக் கொள்வேன்.