வெள்ளிதிரைக்கு ஒரு பாகுபலி போல் சின்ன திரைக்கு ” நந்தினி ” மெகா தொடர்
சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்து கொண்டிருக்கும் நந்தினி மெகாத்தொடரின் நூறாவது எபிசோடை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது , இதை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
சின்னத்திரையில் கலக்கிகொண்டிருக்கும் நந்தினி தொடர் பற்றிய ரகசிய சுவாரசியமான தகவல்கள்
மெகாத்தொடர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழக்கத்தை மாற்றி புதிய கால்தடத்தை பதித்த பெருமை நந்தினி தொடரையே சேரும். இந்த தொடர் முழுக்க முழுக்க சினிமா தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது .நந்தினி தொடர் சன் தொலைக்காட்சியில் டைரக்டர் சுந்தர்.சியுடன் அவனி சினி மேக்ஸ் பிரைவட் லிமிட் தயாரித்துள்ளது.
டைரக்டர் சுந்தர்.சியின் கதைக்கு வெங்கட் ராகவன் திரைக்கதை அமைத்து பத்ரி கே.என் நடராஜன் வசனம் எழுதி யு.கே செந்தில் குமார் ஒளிபதிப்பில் இந்த வெற்றி தொடரை இயக்குனர் ராஜ்கபூர் இயக்கியுள்ளார்.
தொடர் ஆரம்பித்த சில வாரங்களிலே நம்பர் ஒன் இடத்தை பிடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. பொதுவாக ஆவிக்கும் பாம்புக்கும் போட்டி என்றால் விறுவிறுப்பாக இருக்கும். அதனை சுவாரசியமான கதை களத்தில் கொண்டு செல்கிறது. நந்தினி யார்..?? என்று கேள்விகளுக்கு விடை உள்ளது. சின்ன திரையில் குறுகிய காலத்தில் நந்தினி பெற்ற ஆதரவிற்கு முக்கிய காரணம் பிரமாண்டம் மற்றும் அதன் சினிமா தரமும்தான். இன்று அனைவரும் பாகுபலியை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் , ஆனால் இரவு 9 மணி ஆகிவிட்டால் அனைவரின் கவனமும் நந்தினி தொடரை மிஸ் செய்யாமல் பார்ப்பதில் திரும்பி விடுகிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை நந்தினி தொடர் கவர்ந்துள்ளது.
மேலும் பல இடங்களில் ஷூட்டிங் எடுத்துள்ளனர். மலேசியா ,மைசூர், கள்ளிடைகுறிச்சி, பொள்ளாச்சி ,ரிஷிகேஷ் போன்ற இடங்களில் ஷூட்டிங் எடுத்துள்ளனர்.
நந்தினி தொடரின் இயக்குநர் ராஜ் கபூர் நந்தினி தொடரை பற்றி பேசியதாவது ,
நந்தினி என்ற பிரமாண்டத்தை இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி . ஒரு எபிசோடு எடுக்க ஒரு வாரம் முன்கூட்டியே முடிவு செய்வோம். இது ஒரு நாளில் செய்யக்கூடியது இல்லை. இதில் இரண்டு குழுவாக உள்ளோம். சினிமா போன்றே இங்கேயும் கிட்டதட்ட நூறுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள் . சுந்தர்.சி அவர்கள் இத்தொடரை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு அவர் தனது கருத்தை தெரிவித்து சில திருத்தங்கள் செய்வார். எபிசோடு எவ்வளவு என்று சொல்லமுடியாது. அது ரசிகர்களின் வரவேற்ப்பை பொறுத்தது . நந்தினி தொடர் கன்னடம், தெலுங்கு. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது . இதில் எங்களது கடுமையான உழைப்பு உள்ளது. மாதத்தில் 25 வேலை இருக்கும். ஒரு மணி நேரத்தில் எடுத்த காட்சியை கூடுதலாக நேரம் ஒதுக்கி எடிட் செய்வேன். கிளாமர் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் இருக்கிறது. இளைஞர்களிடம் நந்தினி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. குஷ்பூ இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அது மட்டும் அல்லாமல் மற்றுமொரு பிரபலமும் இத்தொடரின் முக்கிய பகுதி ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றார்.
நந்தினியில் கதாநாயகி நித்யாராம் பேசியது ; முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில்நடிக்கும்போது தயக்கமாக இருந்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜமான மனநிலை இப்போது வந்துவிட்டது.
எனது தாய்மொழி கன்னடம். தற்போது தமிழ் எனக்கு நன்கு பழகிவிட்டது. தற்போது எனக்கு என்னுடைய தாய் மொழியை விட தமிழில் நடிப்பது எளிதாக உள்ளது . இது சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வுதான் தருகிறது . மேலும் எனது உடை மற்றும் சிகை அலங்காரம் அனைத்தையும் குஷ்பு மேம் தான் தேர்வு செய்வார்கள்.இங்கு வந்து நான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன் .என்னிடம் பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு நந்தினி தொடரை பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள் . அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இந்த புகழ் அனைத்தும் ராஜ் கபூர் சார் அவர்களையே சேரும். இந்த தொடரில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று தனது உரையை முடித்து கொண்டார்.