அயன், கோ,மாற்றான் என வித்தியாசமான கமர்ஷியல் கலவைகளின் இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான படம்,என்பதால் ஒரு வித ஆர்வம் நம்மை தொற்றிக்கொள்ள, இருக்கையில் அமர்கிறோம். காட்சிகள் விரிகிறது.முதல் ஜென்மம் ;ப ர்மாவில் 1962-ல் ஆரம்பிக்கிறது முதல் ஜென்ம கதை. ராட்சத ராட்டினத்தில் இருந்து கீழே விழும் நாயகியை, கொத்தனார் வேலை பார்க்கும் தனுஷ் காப்பாற்ற, இருவருக்கும் இடையே காதல் பற்றிக்கொள்கிறது. அதை வழக்கம் போல,பணக்கார அப்பா எதிர்க்க, இடையே பர்மாவில் ராணுவ புரட்சி வெடிக்க, காதலர்கள் இருவரும்இந்தியாவுக்கு கப்பல மூலம் தப்பிச் செல்ல முயல்கின்றனர். ஆனால் காதலியின் தந்தையால், கடலுக்குள் உயிருடன் சமாதியாகின்றனர். உருக்கமான முடிவுடன் ‘முதல் ஜென்மம்’ முடிவுக்கு வருகிறது.இதையடுத்து, 1987ல். அதாவது சரியாக 25 வருடங்களுக்குப் பிறகு. அதே பணக்கார அப்பா, அடுத்த ஜென்மத்தில் கதாநாயகிக்கு மாமாவாக பிறக்கிறார். கார்த்திக் முத்துராமன் நடத்தும் ஐ.டி (கேம் சாப்ட்வேர்) நிறுவனத்தில் வசதியான குடும்பத்து பெண்ணாக அமைரா, கைநிறைய சம்பளத்துடனும், மனநிறைய மகிழ்வுடனும் வாழ்கிறார். அங்கு புதிதாக சேர்ந்த தனுஷை பார்த்ததும் தன் புனர் ஜென்மத்து காதலன் கிடைத்துவிட்டான் என… அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் அமைரா. இதற்கு இடையே , இரண்டாம் ஜென்மம் : சென்னையில் உள்ள வியாசர்பாடி தான் இந்த கதையின் தளம். இந்த கதையில் தனுசும்,அமைராவும் . ‘{குப்பத்து’ இளைஞனாக } காளி, ‘{அக்ரஹாரத்து’ பெண்ணாக} கல்யாணியாக வருகிறார்கள் . அதே காதல், அதே முடிவு. ஆனால்,இங்கு தான் திருப்பங்கள் தொடங்குகிறது. கதை விரிகிறது. நாமும் கதைக்குள் நுழைகிறோம்.அமைரா சொல்லும் பூர்வ ஜென்மக் கதைகள் தனுசுக்கு., ஐடி ஒர்க் டென்ஷனால் ஏதோ மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் பெண்ணாகவே காட்சியளிக்க செய்கிறது. தனுஷ், ஒரு கட்டத்தில் உண்மைகளை உணருகிறார். அதன்பின் தடை பல கடந்து, இரண்டு ஜென்மங்களை கடந்த இந்த காதல் ஜோடி,மூன்றாவது ஜென்மத்திலாவது ஒன்று சேர்ந்தார்களா! இல்லையா..? என்பது தான் அனேகன் படத்தின் மீதிக்கதை! பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்பட்டதை தொடர்ந்து தமிழர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதை உணர்ச்சி பொங்க காட்டியிருக்கிறார்கள். அதிலும் பிரமாண்ட கப்பல் காட்சிகள் சூப்பர்! மீராவாக வரும் ஐஸ்வர்யா தேவன், ராதாகிருஷ்ணன்-முகேஷ் திவாரி, கோபிநாத்-ஆஷிஸ் வித்யார்த்தி, ஓவியர் மூர்த்தி-தலைவாசல் விஜய், செம்புலி-ஜெகன், டாக்டர் ராதிகா-லெனா, வினயா-பிரசாத், பாவனா-கிருஷ்ணவேணி, கிரண்-ரஞ்சித் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
தனுஷ் பல கெட்டப்புகளில் வந்திருந்தாலும்… காளி கெட்டப்பில் தான் ரசிகர்களை அதிகம் கவர்கிறார். குறிப்பாக டங்காமாரி பாடலுக்கு தியேட்டரில் இளசுகளின் விசில் பறக்கிறது..நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அலைகள் ஓய்வதில்லை ‘கார்த்திக் … இவர் மட்டும் இடைவெளி விடாமல் இருந்திருந்தால், இன்று பல புது முகநடிகர்களை பார்த்து முகம் சுளிக்கும் நிலை வந்திருக்காது.அதே சுறுசுறுப்பு… அதே விறுவிறுப்பு.. வில்லனாக மாறும் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்.சூப்பர்! ஹீரோயினாக வரும் அமைரா தஸ்தூருக்கு தமிழில் இது முதல் படம் என்பதை நம்ப முடிய வில்லை . கலக்கி இருக்கிறார். படத்தின் கதை இவரை சுற்றியே நகர்வதால் படத்தில் நிறைந்திருக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் மீண்டும் கேட்க தூண்டும் ரகம்… குறிப்பாக டங்கா மாரி பாடல் படத்திற்கு கூடுதல் பலம் . முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் சில இடங்களிலும் எடிட்டர் ஆண்டனி கத்தரியை இன்னும் பலமாக கையாண்டிருந்தால் அலுப்பு தட்டுவதை தவிர்த்து இருக்கலாம். பூர்வ ஜென்மம் என்றாலே காதில் பூச்சுற்றுவதுதான். மொத்தத்தில் கே.வி.ஆனந்த் நம் காதுகளில் பூந்தோட்டத்தையே சுற்றி விடுவதால் அவை மணக்கவும் செய்கின்றன.