மலைகளும், அடர்ந்த வனப்பகுதிகளும் எப்போதுமே பல புதிர்களைத் தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கின்றன. அந்த வகையில், கொடைக்கானலின் மலைக்கிராமப் பின்னணியில், 1983 மற்றும் 2025 ஆகிய இருவேறு காலகட்டங்களை இணைத்து, காதலையும் சஸ்பென்ஸ் திரில்லரையும் ஒருசேரக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் வி.ஜெ. மீனாட்சி சுந்தரம்.
கேரளாவைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளரான நாயகன் ரஜித் மேனன், தன் ஆய்வுப் பணிக்காக நள்ளிரவில் கொடைக்கானலில் உள்ள ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு சென்றது முதலே விவரிக்க முடியாத சில அமானுஷ்ய அனுபவங்களை அவர் எதிர்கொள்கிறார். பொழுது விடிந்த பிறகும் அந்தப் புதிரான சூழல் தொடர, வனத்துறை அதிகாரியின் உதவியோடு திருமணமான நக்ஷா சரண் என்ற பெண்ணின் வீட்டில் தங்க நேரிடுகிறது. நக்ஷா சரண் காட்டும் அக்கறையையும் நெருக்கத்தையும் தவறாகப் புரிந்துகொள்ளும் ரஜித் மேனன், அவரிடம் இணக்கமாகப் பழக முயற்சிக்கிறார். இதனால் மனமுடைந்து கண்கலங்கும் நக்ஷா சரண் அவரிடமிருந்து விலகிச் செல்ல, தன் தவறை உணர்ந்த ரஜித் குற்ற உணர்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.
சில நாட்களுக்குப் பிறகு, தனக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணைத் தவறாக எண்ணிவிட்டோமே என்ற மன உளைச்சலில் இருந்து விடுபட, அவரிடம் நேரில் மன்னிப்பு கேட்பதற்காகத் தன் நண்பருடன் மீண்டும் அந்தக் கிராமத்திற்கு வருகிறார். ஆனால், அங்கே அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. முன்பு தான் சந்தித்த நக்ஷா சரண் உட்பட அந்தக் கிராமத்தில் உள்ள அனைவருமே வேறு பெயர்களிலும், முற்றிலும் மாறுபட்ட அடையாளங்களோடும் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ரஜித் மேனனை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்றும் அவர்கள் மறுக்கிறார்கள். இந்த விசித்திரமான குழப்பத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன என்பதை யூகிக்க முடியாத திருப்பங்களுடனும், உணர்வுப்பூர்வமான காதல் கதையாகவும் விவரிக்கிறது திரைக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரஜித் மேனன், கேரள இளைஞர் என்ற பாத்திரத்திற்குத் தன் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பாலும், இயல்பான தயக்கத்தாலும் மிகச் சரியாகப் பொருந்துகிறார். புதிய சூழலில் சிக்கித் தவிக்கும்போதும், தான் செய்த தவறால் குற்ற உணர்ச்சியில் குறுகும்போதும், கிராமத்து மக்களின் மாறுபட்ட அடையாளங்களைக் கண்டு குழம்பும்போதும் அவரது நடிப்பு காட்சிகளுக்கு நம்பகத்தன்மை சேர்க்கிறது. நாயகியாக நடித்திருக்கும் நக்ஷா சரண், எளிமையான தோற்றத்தில் ஈர்ப்பதோடு, இருவேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு இடையிலான நுணுக்கமான வேறுபாட்டைத் தன் நடிப்பாலும் உடல்மொழியாலும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு நாயகியான தீப்ஷிகாவும் ஒரே கதாபாத்திரத்தின் இருவேறு கோணங்களை உணர்ந்து நடித்துக் கவனத்தை ஈர்க்கிறார். நாயகனின் நண்பராக வரும் விஜே பப்பு, ஜி.எம். குமார், பூ ராமச்சந்திரன், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, வழக்கறிஞர் பாபு, ஈஸ்வர்பாபு, மஞ்சு மற்றும் சிறப்புத் தோற்றத்தில் வரும் ஸ்ரீராம் கார்த்திக் என அனைவரும் தங்களது பாத்திரங்களைக் குறையின்றிச் செய்து கதைக்குப் பலம் சேர்த்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாகப் படம் நல்ல தரத்தில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார்.ஏ, ஒளியமைப்பு மற்றும் வண்ணக் கலவைகள் மூலமாக 1983-ஆம் ஆண்டின் பழமை மாறாத காலகட்டத்தையும், 2025-ஆம் ஆண்டின் நவீன சூழலையும் மிகத் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். தலைப்புக்கு ஏற்ப மலை சார்ந்த பகுதிகளிலேயே கதை நகர்ந்தாலும், இருவேறு காலகட்டங்களின் வாழ்வியலைத் தன் கேமராவால் உயிரோட்டமாகப் பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் ராம்ஜி, ‘சிட்டுக்குறிஞ்சி’ மலரின் வடிவமைப்பிலும், இரு காலகட்டங்களுக்கு ஏற்ற பொருட்களைத் தேர்வு செய்ததிலும் கூடுதல் கவனம் செலுத்திப் படத்திற்கு யதார்த்தம் சேர்த்துள்ளார். இசையமைப்பாளர் மாறாவின் இசையில் பாடல்கள் இயற்கையின் பேரமைதியைப் போல் மனதிற்கு இதம் தருகின்றன; குறிப்பாகப் பழங்குடியினரின் இசைக்கருவிகள் கலந்த பின்னணி இசை கதைக்களத்திற்குப் பெரிய பலம். இரு காலகட்டங்களில் பயணிக்கும் சஸ்பென்ஸ் கதையை, பார்வையாளர்களுக்கு எந்தவிதக் குழப்பமும் ஏற்படாத வகையில் நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் மஹேந்திரன் கணேசன்.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்குத் தேவையான விறுவிறுப்பையும் திருப்பங்களையும் சற்றும் குறைக்காமல், அதேசமயம் காதல் பிரிவையும் அதன் வலியையும் உணர்வுப்பூர்வமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் வி.ஜெ. மீனாட்சி சுந்தரம். மிக முக்கியமான ஒரு சமூகப் பிரச்சினையைப் பிரச்சார நெடியோ, செயற்கையான திணிப்புகளோ இல்லாமல், கதையின் போக்கிலேயே இயல்பாகப் பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது.
மொத்தத்தில், விறுவிறுப்பான மர்ம முடிச்சுகள், மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் நேர்த்தியான தொழில்நுட்ப உருவாக்கத்துடன் ‘சிட்டுக்குறிஞ்சி’ ஒரு நிறைவான திரை அனுபவத்தைத் தருகிறது.