மகன் உமாபதி ஹீரோவாக வேண்டும் என்பதற்காகவே பல படங்களின் வாய்ப்புகளை தியாகம் செய்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் தம்பி ராமையா.
ஊரிலேயே மிகப் பெரிய தலைக்கட்டுக் குடும்பம். பரம்பரை பணக்காரக் குடும்பம் மணியக்காரக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் தற்போதைய தலையான நார்த்தங்காய் சாமி என்னும் தம்பி ராமையா குதிரை பந்தயத்தில் அத்தனை சொத்துக்களையும் இழந்துவிட்டார். இருக்கும் ஒரே சொத்து வீடு மட்டுமே.
அந்த வீட்டிலும் கதவு, ஜன்னல் என்று இருப்பவைகளை விற்றுத்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். மான ,அவமானம் பற்றிக் கவலைப்படாத மானஸ்தர்.!
இவரது மகன்தான் குட்டிமணியார் என்னும் உமாபதி. இவரும் தற்போது வெட்டி ஆபீஸர்தான். இவருடைய தாய் மாமன் விவேக் பிரசன்னாவுடன் சுற்றிக் கொண்டிருப்பார் .
இந்த வெட்டி ஆபீஸர் உமாபதிக்கும், அவருடைய அத்தை மகளான நாயகி மிருதுளாவுக்கும் இடையில் நீண்ட நாள் காதல். இதனால் தன்னைப் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை நாயகி மிருதுளாவே ஏதாவது சாக்கு சொல்லி அனுப்பி விடுகிறார்.
உமாபதிக்கு கல்யாணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார் தம்பி ராமையா. இதற்காக தனது தங்கை மீரா கிருஷ்ணனிடம் பெண் கேட்க நினைத்து ஊரையே கூட்டிக் கொண்டு செல்ல ,மீராவின் கணவரான ஜெயப்பிரகாஷ் “வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுற்றி வரும் உன் பையனுக்கு எவன் பொண்ணு தருவான்..?” என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்.
இதனால் வெகுண்டெழும் உமாபதி இன்னும் 3 மாதத்தில் தான் பெரிய தொழிலதிபராகி ஜெயப்பிரகாஷை தன் வீட்டுக்கு வந்து தன் பெண்ணைக் கட்டிக் கொள் என்று கெஞ்ச வைப்பதாக தனது தந்தை தம்பி ராமையாவின் தொடையில் தட்டி சபதம் செய்கிறார்.
அந்த வெட்டி ஆபீசர் சபதம் நிறைவேறியதா இல்லையா என்பதை விருப்பம் இருந்தால் தியேட்டரில் சென்று பாருங்கள். திருட்டு வி.சி.டி.யில் பார்க்காதீர்கள்.
எல்லாம் நானே குதித்திருக்கிற இயக்குநர் தம்பி ராமையா கதைக் கருவைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்.
மான, ரோஷத்துக்கு ஆட்படாதவர் என்று அவரைக் காட்டியிருப்பது மணியகாரர் குடும்பக் கதையின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிட்டது.
எந்தத் தைரியத்தில் பெண் கேட்டுப் போகிறார்.. பையன் என்ன வேலையில் இருக்கிறான்.. பையன், மருமகள் காதல் அவருக்குத் தெரியுமா.. தெரியாதா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஊர்க்காரர்களின் கேலி, கிண்டலைக்கூட கண்டு கொள்ளாமல் இருப்பது படத்தையே கேலிக் கூத்தாக்கிவிட்டது.
சமுத்திரக்கனி என்னும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மிக நெருங்கிய உறவுக்காரர் . அவரை வைத்தே இந்தக் கதையை கொஞ்சம் உண்மைத்தன்மையுடன் நகர்த்தியிருக்கலாமே..
தம்பி ராமையாவின் அம்மாவின் கதை, சிங்கம்புலியின் கதை, . இதையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடத்திலெல்லாம் தம்பி ராமையா-ஜெயப்பிரகாஷ் குடும்பக் கதையை இன்னும் கொஞ்சம் சொல்லியிருந்தால் மனதில் டச் ஆகியிருக்கும்.
உமாபதி ஹீரோவாக ஆக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய நடனம், சண்டை பயிற்சி இதெல்லாம் சூப்பர்,
நாயகி மிருதுளா ரவியின் வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் ரசிக்க முடிகிறது.
குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொட்டியிருக்கிறார் தம்பி ராமையா. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தான் இருக்கும் பிரேமில் கொஞ்சம்கூட நழுவாமல் முழு நடிப்புத் திறனையும் காட்டியிருக்கிறார் தம்பி. அவரது சிச்சுவேஷனுக்கேற்ற டயலாக் டெலிவரி, நொடிக்கு நொடி மாறும் முக பாவனைகள், நல்லவரா… கெட்டவரா.. புரிந்து பேசுகிறாரா.. அல்லது புரியாமல் பேசுகிறாரா என்பதையெல்லாம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தம்பி ராமையா.
இடைவேளைக்கு பின்பு நமக்குக் கிடைக்கும் ஒரேயொரு ஆறுதல் மொட்டை ராஜேந்திரனை வைத்து ஹோட்டலில் தம்பி ராமையா படும்பாடுதான்.
தம்பி ராமையா இயக்குநர் என்பதையும் தாண்டி சிறந்த இசையமைப்பாளர் என்கிற பெயரை இந்தப் படத்தின் மூலம் பெற்றிருக்கிறார். பாடல்கள் அனைத்துமே மீண்டும், மீண்டும் கேட்கும் ரகம்.
‘அடி பப்பாளி பழமே.. என் தக்காளி ரசமே’ பாடல் காட்சியில் யாஷிகா ஆனந்தை அழைத்து வந்து ஆட வைத்த தந்திரத்தை படத்தின் மற்றவைகளிலும் பயன்படுத்தியிருக்கலாம். நடனமும், பாடலும் துள்ள வைக்கிறது. இதேபோல ‘ஸ்லீப்பி கண்ட மீனு’, ‘என் மனசுக்குள்ள’ பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். தம்பி ராமையா இசையமைப்பாளராகவும் ஒரு ரவுண்டு வரலாம்.