கடந்த 2008 -ம் ஆண்டு இந்தியில்,ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா பேட்டியில் கூறியிருந்தது பாலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது. சம்பவம் நடந்த போது, நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவும் உடன் இருந்ததாக அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்கறிஞர் மூலம் நானாபடேகருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறியிருந்த நிலையில், அப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்றும் தனுஸ்ரீ பொய் பேசுவதாகவும் நானா படேகர் கருத்து தெரிவித்து இருந்தார். நானாபடேகருக்கு ஆதரவாகவும்,எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில்,மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் நானா படேகர், டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக்கி மற்றும் இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார் தனுஸ்ரீ தத்தா. ஆனால் இது தொடர்பாக இன்னும் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றும்,சமரசமாக செல்லும்படி இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.