விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படத்தில், ஆளும் அதிமுகஅரசுக்கு எதிரான சர்ச்சை கருத்துகள் இருப்பதாக கூறி படத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது. ‘சர்கார்’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் எல்லாம் பேனர்கள் கிழிக்கப்பட்டு, திரையரங்குகள் மீது தாக்குதலும் நடந்தது.இதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. படம் மறு தணிக்கைக்குச் சென்று சான்றிதழும் பெற்றது. படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி, அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமினும் வழங்கியுள்ளது. இவ்விவகாரம் நடிகர்,நடிகைகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர்,நடிகைகள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் சர்கார் படத்துக்கு ஆதரவாகவும் ,ஆளும் கட்சியை எதிர்த்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
சிபிராஜ், “முறையாக தணிக்கை செய்யப்பட்டு வெளியான ஒரு திரைப்படத்தை தடை செய்ய எவருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செய்வது ஜனநாயக முறைக்கு அவமானம்! என்று சர்காருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வு செய்வர் என்று ‘சர்கார்’ விவகாரத்தில் பிரசன்னா கருத்து தெரிவித்துள்ளார்.
சர்கார் சர்ச்சை குறித்து அந்தப் படத்தில் வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், “ஒரு படத்தைப் பார்த்து பயப்படும் அளவுக்கா இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது? நீங்களே உங்கள் நற்பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்.
நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில்,’எதைச் செய்யக்கூடாதோ அதையே செய்து கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து இத்தகைய முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள்” என ட்வீட் செய்துள்ளார்.
‘‘தமிழ் திரைத்துறையில் குறிப்பிட்ட மாஸ் நடிகரான விஜய்யை குறிவைப்பது சரியல்ல. திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள். தணிக்கை செய்யப்பட்டப் பிறகு பிரச்சனை உருவாக்கதேவையில்லை.சர்கார் ஒரு திரைப்படம். ஒரு வேளை இது விஜயின் அரசியல் ஆசையாக இருந்தால் அது தவறில்லை.சட்டத்தின்படி தணிக்கை பெற்ற இத்திரைப்படத்தை, அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்க நினைப்பது, வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்கச் சொல்வது, கருத்து சொல்லும் உரிமைக்கு எதிரான செயல்பாடாகும். இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால், ஒட்டுமொத்தத் திரைப்படத்துறையையும் இணைத்து பெரும் போராட்டத்தைத் தொடங்குவோம்”.இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார்.
‘‘தணிக்கை வாரியத்தைக் கலைத்துவிடலாம். அதற்குப் பதிலாக எந்தப் படம் திரைக்கு வரவேண்டும்.. எந்த மாதிரியான காட்சிகள் இடம்பெற வேண்டும். எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள், சாதி அமைப்புகள், கலாச்சாரக் காவலர்களே முடிவு செய்யட்டும்.சர்கார்’ நிச்சயமாக முடிவுரையாக இருக்கப் போவதில்லை. சர்காரில் சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருப்பதாலும் சில காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாலும் மட்டுமே எல்லாம் முடிந்துவிடப் போவதில்லை. ‘சர்கார்’ அதிமுக கோமாளிகளுக்கு அவர்களது குண்டர் கலாச்சாரத்தை அரங்கேற்ற றெக்கைகளை வழங்கியிருக்கிறது. இப்படித்தான், படிப்பறிவே இல்லாத கூட்டம் நம் மாநிலத்தை ஆள்கிறது என்பதை உலகிற்கு நாம் காட்டியிருக்கிறோம்” என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.
“சர்கார் பிரச்சினையைப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் என்ற ஒன்று தேவையா எனத் தோன்றுகிறது? ஒரு செய்தி மட்டும் நிதர்சனம். விஜய் அண்ணா நாளுக்கு நாள் உயர உயர முன்னேறிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை ஒரு வட்டம், ஜெயிப்பேன்… இந்த வசனம்தான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது” என இயக்குநர் கவுரவ் நாராயணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“ தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். பிறகு நமக்கு எதுக்கு சென்சார் போர்டு? பொதுமக்கள் மீது வன்முறையை செலுத்த முயற்சிப்பது சரி அல்ல” என்று நடிகரும்,இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சீனு சாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,”தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். பின்பு நீக்கப்பட்ட காட்சிகளுடன் மறு தணிக்கை செய்து தான் படத்தை வெளியிட வேண்டும், இதுதான் நடைமுறை, ஆகவே எவருக்கும் எந்த அமைப்புக்கும் காட்சிகளை நீக்கும் அதிகாரமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் பிரசன்னா, “மன்னனை எதிர்த்து கேள்வி கேட்ட வரலாறும், புலவர்கள் வஞ்சப் புகழ்ச்சி செய்த இலக்கியமும் தமிழில் உண்டு. அரசை கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்ததே! இப்போது இல்லாமல் போனது சகிப்புத்தன்மை! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வு செய்வர்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.