உச்ச நட்சத்திரமே, உங்க உள்ளத்தை திறந்து சொல்லுங்க, எல்லா சான்றிதழ்களும் முடிந்து, வியாபாரத்திற்கு வந்த ஹார்லிக்ஸ் பாட்டில, வீட்டுக்கு வாங்கி வந்து அதனை திறக்கும்போது, அதனுள்ளே ஒரு பல்லி கிடந்தால், எல்லா சான்றிதழ்களும் பெறப்பட்ட ஹார்லிக்சை, கீழே எடுத்துக் கொண்டு போய் கொட்டுவீர்களா?. இல்லை சான்றிதழ்கள் சரியாகத்தான் இருக்கிறது என்று அதனை செத்துக் கிடக்கும் பல்லியோடு சேர்த்து அதுவும் சத்துதான் என்று பருகுவீர்களா?.
தணிக்கை குழுவுக்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் திரைப்படங்களுக்கு சான்றிதழ் கிடைத்துவிட்டாலும் அல்லது தணிக்கைக் குழுவையும் சரிக்கட்டி, தவறான தகவல்களோடு அரசுக்கு எதிராக உள்நோக்கத்தோடு ஒரு மோசமான கருத்து சினிமா என்கிற தலையாய ஊடகத்தின் வழியே பரப்பப்பட்டால், அதனை தடுத்து நிறுத்தத்தானே வேண்டும்.
நீதிமன்றம்கூட, மக்களுக்கு விலையில்லாமல் தரப்படும் திட்டங்கள் சமூக நோக்கத்திலானது, அதற்கு எதிராக நாங்கள் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று ஏற்கனவே தீர்ப்பே தந்திருக்கும் நிலையில், அரசின் முத்திரை அச்சிடப்பட்ட மிக்சியைக் கொண்டுபோய் நெருப்பில் போடுவதுபோல காட்சி அமைப்பதும், அதனையும், ஒரு தேசிய விருது பெற்ற மூத்த இயக்குனரே முன்னின்று செய்வதும் எவ்வகையில் நியாயம்?.
இப்படி இலவசத்தை இழிவு செய்வது போன்று படம் எடுத்துவிட்டு பிறகு அவர்களே வரி விலக்கும் கோரி அரசாங்கத்திடம் விண்ணப்பம் போடுகிறார்களே அது நியாயமா?. சமூகத்தில், மேலோங்கி நிற்கும் ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வை சமன் செய்வதற்கு சமூக நீதியிலான நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு போன்றதுதான், விலையில்லா பொருட்களும்.இன்றைக்கு கோடிகளிலே புரளுகிற முருகதாசுக்கும், நடிகர் விஜய்க்கும் அரசு தருகிற மிக்சி, கிரைண்டர் போன்றவை இழிவாகத் தோன்றலாம். ஆனால், கலையுலகத்தில் கால் பதித்து, வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையோடு, கோடம்பாக்கத்து வீதிகளிலே அலைமோதிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு அம்மா உணவகம் என்பது ஓர்வகையில் தாய் மடியல்லவா?. மிக்சி, கிரைண்டர் என்பது இல்லாதோருக்கு இறைவனின் பரிசு போன்றதல்லவா?.லட்சோப லட்சம் பேருக்கு தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மிகப்பெரும் கொடுப்பினை தானே.
இதையெல்லாம் உணர்ந்திருந்தும் இந்த அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுவதே நோக்கம் என்கிற வக்கிரப் புத்தியோடு மறைந்த ஒரு தலைவியின் இயற்பெயரை ஒரு கதாபாத்திரத்துக்கு சூட்டி, அவரைப் போலவே, ஆடைகள் தரித்து, அவரது கனவுத் திட்டங்களை அவமானப்படுத்தும் காட்சிகளை வைப்பது எவ்வகையில் நியாயமோ.
ஜெயலலிதா அரசால் வழங்கப்படுகிற லேப்டாப், 100 யூனிட் மின்சாரம், 20 கிலோ அரிசி, தாலிக்குத் தங்கம், ஏழை-எளிய பெண்களுக்கு கல்வி மற்றும் திருமண உதவித்தொகை என்கிற பிற மாநிலங்களும் பின்பற்றுகிற திட்டங்கள் பல இருக்க, எதனை குறை சொல்லலாம் என்று பூதக் கண்ணாடிக் கொண்டு தேடி ஒரு வழியாய் மிக்சியை நெருப்பில் இட்டு மகிழ்கிறவர்களுக்கும், அரசுக்கு எதிராக கண் சிவக்க வசனம் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் முதல்-அமைச்சராகிவிடலாம் என்று கனவில் மிதக்கிற நடிகர் விஜய்க்கும், சரியான புரிதல் இல்லாமல், அரசாங்கத்திற்கே ஆலோசனை சொல்லி அலைகிற அரை வேக்காட்டு இயக்குனர் முருகதாசுக்கும், ரஜினிகாந்த் அறிவுரை சொல்ல வேண்டுமே தவிர, அதைவிடுத்து கிணறு வெட்டுன ரசீது என்கிட்ட இருக்குன்னு வடிவேலு, காமெடியைப் போல, தணிக்கைச் சான்றை சுட்டிக்காட்டி, ஒரு தவறுக்கு ரஜினிகாந்த் வக்காலத்து வாங்கலாமோ.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.