‘தலைவி”க்கு தீபாவின் தடையில்லா சான்று கிடைக்குமா?

.தமிழ் திரையுலகில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் விஜய் மற்றும் இயக்குநர் பிரியதர்ஷினி மூன்று பேர் படம் இயக்கவுள்ளனர்.

இதில் இயக்குநர் பிரியதர்ஷினி தனது படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று பெயரிட்டுள்ளார்.

இதில் ஜெயலலிதாவாக நித்யாமேனன் நடிக்கிறார்.

இந்நிலையில்,இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு  ‘தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  இயக்குனர் விஜய் கூறியதாவது,

“தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும்

தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்” என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது.

ஜெயலலிதா அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவரின்  தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன்.

மிக நேர்மையான ஒரு வரலாற்று படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்.

இந்த ‘தலைவி’ தலைப்பை வெளியிட அவரது பிறந்த நாளை விட மிகச்சரியான தருணம் ஏதும் இல்லை.

எங்களுக்கு இந்த படத்தை உருவாக்க தடையில்லா சான்று கொடுத்த ஜெயலலிதா அம்மா அவர்களின் அண்ணன் மகன் .தீபக்குக்கு நன்றி.

பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார்  என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பங்களிப்பு இந்த படத்துக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கும்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். என் படங்களில் மிகச்சிறந்த ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்

மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்கி றார்

எல்லாம் சரி,தடையில்லா சான்று கொடுப்பதற்கு தீபா சம்மதம் சொல்லி விட்டாரா?

அவரும் ஒரு வாரிசு ஆயிற்றே.!