இந்நிலையில், 800 படத்தை தயாரிக்கும் பட நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம், பல்வேறு வகையில் அரசியலாக்கப்பட்டு வருவதை அறிகிறோம். ‘800’ திரைப்படம் முழுக்க, முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர, இதில் எந்தவித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்திலிருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி, உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார என்பதுதான்இத்திரைப்படத்தின் கதை அம்சம்.
இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும், வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும், தடைகளை கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும்.
இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமை படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கு பெற உள்ளனர். அதன்மூலம் இலங்கை தமிழ் திரை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிக்காட்ட இப்படம் நிச்சயமாக ஒரு அடித்தளம் இட்டு தரும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். கலைக்கும், கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளை கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும், நம்பிக்கையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம்”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.