‘அண்ணாத்த’ படப்பிடிப்பு அடுத்தவாரம்! வெளியான முக்கிய தகவல்கள்!!

‘தர்பார்’  படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ,சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த. படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

ஐதராபாத்தில் ஏற்கெனவே ரஜினிகாந்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், இப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், வரும் டிசம்பர் 31-ம் தேதி தான் அரசியல் கட்சி தொடங்க உள்ள தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகவும், ஜனவரியில் புதிய கட்சி உதயமாகும் என்றும், தான் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு இன்னும் 40 சதவீதம் பாக்கி உள்ளதாகவும்,அதை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இம்மாதம் முதல் படப்பிடிக்குச் செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்த நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தந்தையம், அருணாச்சல ஸ்டுடியோவின் அதிபருமான ஜெயக்குமார் கடந்த நவம்பர் 27-ம் தேதி எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததால் திட்டமிட்டபடி படப்பிடிப்புக்குச் செல்ல முடியாத நிலை உருவானது.

இதையடுத்து பெங்களுருக்கு சென்று விட்டு, இன்று பகல் 12 மணிக்கு சென்னை திரும்பியுள்ள ரஜினி, (டிசம்பர் 12-ம் தேதி) தனது பிறந்தநாளைக் கொண்டாடி விட்டு,ஐதராபாத்தில்   டிசம்பர் 15-ம் தேதி முதல் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் வருகிற 2021 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்ட நிலையில் தற்போது கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்கிறார்கள். டிசம்பர் 15-ம் தேதி படப்பிடிப்பில் ரஜினியுடன் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது